லேபிள்கள்

18.5.16

பிளஸ் 2 தேர்வில் மாநகராட்சி பள்ளிகள்... அபாரம்! வெள்ள பாதிப்பிலும் விடா முயற்சியால் வெற்றி !

வடகிழக்கு பருவமழை வெள்ளம் புரட்டி எடுத்த போதிலும், சென்னை மாநகராட்சி பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், கடந்த ஆண்டை காட்டிலும், 1 சதவீதம் கூடுதலாக, 86.21 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளன.
சென்னை மாநகராட்சி நடத்தும், 32 மேல்நிலைப் பள்ளிகளில், 2,211 
மாணவர்கள், 3,648 மாணவியர் உட்பட, 5,859 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதினர். நேற்று வெளியான தேர்வு முடிவில், 1,728 மாணவர்கள், 3,323 மாணவியர் உட்பட, 5,051 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

மாணவர்களில், 78.2 சதவீதம் பேரும், மாணவியரில், 91.1 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். இது, 86.2 சதவீத தேர்ச்சி. இது, கடந்த ஆண்டை காட்டிலும், 1 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம், 85.25 சதவீதமாக இருந்தது.

100 சதவீத தேர்ச்சி

கடந்த ஆண்டு இரண்டு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து இருந்தன. இந்தாண்டு, கோயம்பேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, சுப்பராயன் தெரு மேல்நிலைப் பள்ளி, லாயிட்ஸ் சாலை மேல்நிலைப் பள்ளி ஆகியவை, 100 சதவீத தேர்ச்சியை பதிவு செய்து உள்ளன.

கொருக்குபேட்டை, புத்தா தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்வப்னா, 1,166 மதிப்பெண் எடுத்து, மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதலிடமும், சி.ஐ.டி., நகர் மேல்நிலைப் பள்ளி மாணவி புவனேஸ்வரி, மடுவங்கரை மேல்நிலைப் பள்ளி மாணவி ராமலட்சுமி ஆகியோர் 1,157 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும் பெற்றனர்.

சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தரணி, கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதி பிரியா, புல்லா அவென்யூ பள்ளி மாணவி சஞ்ஜனா, 1,155 மதிப்பெண் எடுத்து, மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

மொத்தம், 41 மாணவ, மாணவியர், பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்று உள்ளனர். இதில், கணிதம் ஒருவர், வணிக வியலில் 12 பேர், கணக்குப்பதிவியலில் 24 பேர், வணிக கணிதத்தில் நான்கு பேர் அடக்கம்.

மொத்தம் உள்ள, 32 பள்ளிகளில், 15 பள்ளிகள், 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. இது, கடந்த ஆண்டு, 16 பள்ளிகளாக இருந்தன. மேலும், 31 பள்ளிகள், 60 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு, 30 பள்ளிகள், இந்த சதவீதத்தை எட்டின.

பாராட்டு

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப் பட்ட சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளி, 51.76 சதவீதம் மட்டுமே பெற்று, கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்த பள்ளியில், 284 மாணவ, மாணவியர் தேர்வு எழுதி, 147 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தம், 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மூன்று மாநகராட்சி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாநகராட்சி அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ள பள்ளிகளின் வளர்ச்சிக்காக, மாநகராட்சி தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசு வழங்கியுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகள், 1996 - 97ல், 69 சதவீத தேர்ச்சி பெற்றிருந்தது. நடப்பாண்டில், 86.21 சதவீத தேர்ச்சியடைந்துள்ளது.



தொடரும் சோகம்!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் போது, சென்னை மாநகராட்சி பள்ளிகள் அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர் மேயரை சந்தித்து ஆசி பெறுவது வழக்கம். கடந்த 2014ல் லோக்சபா தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் என மூன்று ஆண்டுகளாக மே மாதங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், மாணவ, மாணவிகள் மேயரை சந்திக்க முடியாத சூழல் உள்ளது.


ஐ.ஏ.எஸ்., படிக்க விருப்பம்

என் தாய் டெய்லர் வேலை பார்த்து என்னை படிக்க வைத்தார். ஐ.ஏ.எஸ்., படிக்க விரும்பு கிறேன். என் தாயை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதே ஆசை.

ஜி.புவனேஸ்வரி, 1,157 மதிப்பெண். மாநகராட்சி அளவில் இரண்டாம் இடம். (சி.ஐ.டி.,நகர் பள்ளி)



ஆடிட்டர் ஆவேன்

என் தந்தை தினக்கூலி. குடும்ப வறுமையால் படிப்பு மட்டுமே வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதை உணர்ந்து படித்தேன். 'தினமலர்' நடத்திய, 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சியில் கொடுத்த குறிப்பு, இந்த அளவிற்கு மதிப்பெண் பெற உதவியது. சி.ஏ., படித்து ஆடிட்டர் ஆவேன். பெற்றோர் கஷ்டத்தை தீர்ப்பேன்.

எம்.ராமலட்சுமி, 1,157 மதிப்பெண்.

மாநகராட்சி அளவில் இரண்டாம் இடம்.

(மடுவங்கரை மேல்நிலைப் பள்ளி)

சி.ஏ., படிக்க விருப்பம்

தந்தை கார் டிரைவர். நான் பச்சை நிற பேனாவால் கையெழுத்து போட வேண்டும் என்பது அவரது கனவு. அதற்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும், படி என, கூறுவார். சி.ஏ., படிக்க விரும்புகிறேன்.

ஆர்.தரணி, 1,155 மதிப்பெண்.

மாநகராட்சி அளவில் மூன்றாம் இடம்.

(சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளி)

வழிகாட்டிய 'தினமலர்'

என் தந்தை செக்யூரிட்டி. பெற்றோர், ஆசிரியர் ஒத்துழைப்புடன், கடினமாக படித்தேன். இந்த மதிப்பெண் திருப்தி அளிக்கவில்லை. 'தினமலர்' ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில், கூறிய அறிவுரை பயனுடையதாக இருந்தது. சி.ஏ., படிக்க உள்ளேன்.

ஜி.ஜோதிபிரியா, 1,155 மதிப்பெண்.

மாநகராட்சி அளவில் மூன்றாம் இடம்.

(கோயம்பேடு மேல்நிலைப் பள்ளி)



பெற்றோரால் மகிழ்ச்சி

என் தந்தை சிறுவயதில் இறந்துவிட்டார். தாய், வீட்டு வேலை செய்து என்னை படிக்க வைக்கிறார். அவரை வாழ்நாள் முழுவதும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக படிக்கிறேன். இந்த மதிப்பெண் எடுத்ததால், தாய் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளார். அது தான் எனக்கு மகிழ்ச்சி.

சி.சஞ்ஜனா, 1,155 மதிப்பெண்.

மாநகராட்சி பள்ளிகளில் மூன்றாம் இடம்.

(புல்லா அவென்யூ பள்ளி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக