லேபிள்கள்

17.5.16

முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1ல், பள்ளிகள் திறக்கப்படுகின்றன; அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்
சேர்க்கையை, கடந்தாண்டை காட்டிலும், 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பள்ளிகள் தரப்பில், தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பாடப்பிரிவுகளில், மாணவர்சேர்க்கைக்கான விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. சட்டசபைதேர்தலுக்குபின், இந்நடவடிக்கை தீவிரமடைய உள்ளது.

அரசு மற்றும் மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், ஜூன் முதல் வாரத்தில், மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதல் வகுப்பில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு, பிறப்பு சான்றிதழ் அவசியம் இருக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வித்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடந்தாண்டில், பிறப்பு சான்றிதழ் பெறாமல், மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதால், பலவித குழப்பம் ஏற்பட்டது. பிறப்பு சான்றிதழில்உள்ள தேதி, மாதம், ஆண்டு, பள்ளி பதிவேட்டில் உள்ள தேதி, மாதம், ஆண்டு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். 

பெற்றோர் கூறும் அடிப்படையில், மாணவர்களின் பிறப்பு விவரங்களை, ஆசிரியர்கள் பதிவுசெய்யக்கூடாது.பிறப்பு சான்றிதழ் இல்லாமல், மாணவர்களை முதல் வகுப்பில் சேர்க்கக்கூடாது. வருகை பதிவை, பள்ளி திறக்கப்படும் முதல் நாளில் இருந்தே துவக்க வேண்டும். அதற்கேற்ப, வருகை பதிவேடுகளை பள்ளி திறப்பதற்கு முன், தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரசு வேலைவாய்ப்பு பெறவும், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய ஆவணங்களை பெறவும், பிறப்பு சான்றிதழ் முக்கியமானதாக உள்ளது; பிறப்பு சான்றிதழ் இல்லாத பட்சத்தில், பள்ளி மாற்று சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழில் உள்ள பிறப்பு நாள், முக்கிய ஆவணமாக ஏற்கப்படுவதால், அதில் தவறு நிகழாதபடி, பள்ளி பதிவேட்டில் சரியாக பதிய, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக