லேபிள்கள்

18.5.16

ஏழை தொழிலாளர் வாரிசுகள் இதுவல்லவோ சாதனை! பிளஸ் 2 தேர்வில் அபாரம் !

கோவை மாநகராட்சி பள்ளிகளில், பிளஸ் 2 தேர்வில், கூலித்தொழிலாளிகளின் வாரிசுகள், முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.



கோவை மாநகராட்சியிலுள்ள, 16 மேல்நிலைப்பள்ளிகளில், 1,453 மாணவியர் உள்பட, 2,193 பேர், பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதினர். அவர்களில், 601 மாணவர்களும், 1,354 மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள், 81.21 சதவீதமும், மாணவியர், 93.18 சதவீதம் தேர்ச்சி பெற்றதால், ஒட்டு மொத்தமாக, மாநகராட்சி பள்ளிகள், 89.15 சதவீதம் தேர்ச்சி பெற்றது. கடந்த ஆண்டு, 89.34 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தது.

மாநகராட்சி பள்ளிகளில், முதல் ஐந்து இடங்களையும், ஒப்பணக்காரவீதி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவியர் பிடித்தனர். 'ரேங்க்' பெற்ற, ஐந்து மாணவிகளும் கலைப்பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநகராட்சி பள்ளிகள் அளவில், முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள், கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள். அனைவருமே, பி.காம்., சி.ஏ., படித்து பெற்றோருக்கு உதவ வேண்டும் என்ற கருத்தையே தெரிவித்துள்ளனர். இந்த மாணவிகள், தினமும் செய்தித்தாள் படிப்பது, 'டிவி' நிகழ்ச்சிகளை ரசிப்பது, பொழுதுபோக்குக்காக சினிமாவுக்கு செல்வது எதையும் தவற விடவில்லை என்றனர்.

'ரேங்க்' பிடித்த மாணவிகள் மட்டுமல்லாமல், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 90 சதவீதம் பேர், கூலித்தொழிலாளிகள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்களின் குழந்தைகளே. வகுப்புகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை கவனித்து, சிறப்பு பயிற்சி எடுத்துக்கொண்டு, வீட்டிலும் பயிற்சி எடுத்து, சிறப்பான மதிப்பெண் பெற்றுள்ளனர்.



'திட்டமிட்டு படித்தேன்'

1,158 மதிப்பெண் பெற்ற மாணவி ஜூனோப்பியா பேகம், கூறுகையில், ''அப்பா முகமது நாசர், தேங்காய் பால் மற்றும் குழாய் புட்டு வியாபாரம் செய்கிறார். படித்து வேலைக்கு சென்று, குடும்பத்துக்கு உதவ வேண்டும், என்பதற்காக திட்டமிட்டு படித்தேன். ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதற்குமுன், பி.காம். சி.ஏ., படித்து, ஆடிட்டராகி குடும்பத்துக்கு உதவ வேண்டும்,'' என்றார்.



'தினமும் பயிற்சி'

1,153 மதிப்பெண் பெற்ற மாணவி, அனு, கூறுகையில், ''அப்பா கிருஷ்ணன், தனியார் பாத்திரக்கடையில், பொருட்கள் டெலிவரி கொடுக்க, கைவண்டி இழுக்கும் பணி செய்கிறார். பி.காம். சி.ஏ., படித்து, குடும்பத்துக்கு உதவி செய்ய வேண்டும்; பெற்றோரை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதே விருப்பம்.

பள்ளியில் தினமும் எடுத்துக்கொண்ட பயிற்சி அதிக மதிப்பெண் பெற கைகொடுத்தது. பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு, ஆசிரியர்கள் மொபைல்போனில் கேட்டபோதும், விளக்கம் கொடுத்து ஊக்குவித்தனர். ஆங்கில மொழிப்பாடம் மட்டுமே சிரமமாக இருந்தது,'' என்றார்.



'தவறுகளை திருத்தினர்'

1,152 மதிப்பெண் பெற்ற திலகவதி கூறுகையில், ''அப்பா கட்டட தொழிலாளி. குடும்ப கஷ்டத்தை உணர்ந்து படித்தேன். ஆசிரியர்கள் பாடங்களை புரியும் வகையில் வகுப்பு எடுத்தனர். சிறப்பு பயிற்சி கொடுத்து, தவறுகளை திருத்தினர். இதனால், அதிக மதிப்பெண் பெற முடிந்தது. பி.காம்., சி.ஏ., படித்து ஆடிட்டராக வேண்டும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக