'பிளஸ் 2வில், எந்த பிரிவு மாணவர்களும், சி.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளில் சேரலாம்' என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'தினமலர்' மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்கும், வழிகாட்டி நிகழ்ச்சியில், இரண்டாம் நாளான நேற்று, இன்ஜினியரிங், ஆட்டோமேஷன், ஐ.டி., துறை மற்றும் சி.ஏ., என்ற ஆடிட்டர் படிப்பு குறித்தும், 'நீட்' தேர்வுக்கு தயாராகும் முறை குறித்தும், கல்வியாளர்கள் ஆலோசனை அளித்தனர்.
ஆடிட்டர் சரவண பிரசாத்: ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை, படிக்க வேண்டும். இந்த மூன்று படிப்புகளும், பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை, தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். முதலில் தகுதி தேர்வும், பின், இடைநிலை தேர்வும், பின், இறுதி நிலை தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறுவோர், ஓர் ஆண்டு நிறுவன பயிற்சியை மேற்கொள்ள, சி.ஏ., அமைப்பு ஏற்பாடு செய்கிறது. பயிற்சிக்கு பின், கேம்பஸ் மூலம் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முதல் வேலைவாய்ப்பிலேயே, மாதம், 50 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம். அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன், ஒரே ஆண்டில், சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது.
கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி: எந்த கோர்ஸ் படித்தாலும், தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும். படிக்கும் போதே திறனை வளர்த்து கொள்ள வேண்டும். எதில், வாய்ப்பு, வளர்ச்சி என்பதை தெரிந்து, படிப்புகளை தேர்வு செய்யுங்கள். இன்ஜினியரிங் துறையில் மட்டுமே, ஆண்டுக்கு, மூன்று லட்சம் வேலை வாய்ப்புகள் உறுதியாக கிடைக்கின்றன. படிக்கும் போதும், வேலையில் சேர்ந்த பிறகும் போராட்டங்களில் ஈடுபடாதீர்கள். சமீபத்தில், தமிழகத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட, 458 பேரை, கார்ப்பரேட் நிறுவனங்கள் வேலையை விட்டு வெளியேற்றி உள்ளன. படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போல, கல்லுாரியை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கல்வியாளர்கள் பேசினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக