லேபிள்கள்

5.4.17

தரவரிசையில் திணறிய சென்னை, மதுரை பல்கலை : அரசு கலை கல்லூரிகளும் பரிதாபம்

முறைகேடு புகார்களில் சிக்கிய, சென்னைப் பல்கலையும், மதுரை காமராஜர் பல்கலையும், தேசிய தரவரிசை பட்டியலில் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. அரசு கல்லுாரிகளின் நிலையும் பரிதாபமாகி உள்ளது.


மத்திய அரசின், தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல், நேற்று முன்தினம் வெளியானது. இதில், ஒட்டுமொத்த தரத்தில், சென்னை, ஐ.ஐ.டி., முதலிடம் பிடித்தது; அண்ணா பல்கலை, 13ம் இடம் பெற்றது. நஷ்டத்தில் இயங்கும் அண்ணாமலை பல்கலை, 92ம் இடம் பெற்றது.
நுாற்றாண்டு பழமையான, சென்னைப் பல்கலை, 64ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பாரதியார் பல்கலைக்கு, 45ம் இடம் கிடைத்துள்ளது. மதுரை காமராஜர் பல்கலை, சேலம் பெரியார் பல்கலை போன்றவை, 100க்கும், 150க்கும் இடையிலான, இரண்டாம் கட்ட பட்டியலில் மட்டுமே, இடம் பெற்றுள்ளன. 

அண்ணா பல்கலை துணைவேந்தர் இல்லாத நிலையிலும், தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேபோல், துணைவேந்தர் இல்லாத, சென்னை மற்றும் மதுரை காமராஜர் பல்கலைகளில், செனட் மற்றும் சிண்டிகேட்டில், நிதி முறைகேடு புகார்கள் எழுந்த நிலையில், கல்வித்தரத்திலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.

பல்கலைகளுக்கான தரவரிசை பட்டியலில், பாரதியார் பல்கலை, 28; பாரதிதாசன் பல்கலை, 88ம் இடங்களை பிடித்துள்ளன. திருவள்ளுவர், மனோன்மணியம் சுந்தரனார், சட்ட பல்கலை, இசை பல்கலை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை போன்றவை, தரவரிசைக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் கூட இடம் பெறவில்லை. 

கல்லுாரிகளுக்கான தனி தரவரிசை பட்டியலில், முதல், 100 இடங்களில், தமிழக அரசின் கலை, அறிவியல் கல்லுாரிகள் எதுவும் இடம் பெறவில்லை. 100 முதல், 150 வரையிலான, இரண்டாம் கட்ட பட்டியலிலும், தமிழக அரசு கல்லுாரிகள் இடம் பெறாமல், பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தனியார் கல்லுாரிகள் அபாரம் : கல்லுாரிகளின் தரவரிசையில், தேசிய அளவில், டில்லி மிராண்டா ஹவுஸ் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தின் லயோலா, 2; திருச்சி பிஷப் ஹேபர், 4; சென்னை கிறித்தவ பெண்கள் கல்லுாரி, 10; கோவை பி.எஸ்.ஜி., 11; சென்னை எம்.சி.சி., 12; சென்னை எத்திராஜ், 16; மதுரை பாத்திமா, 27; சென்னை எஸ்.ஐ.இ.டி., 47; எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி, 82ம் இடங்களை பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக