லேபிள்கள்

4.4.17

'கையேந்த' வைக்கும் கல்வித்துறை! : 'வழிகாட்ட' விழிபிதுங்கும் ஆசிரியர்கள்

கல்வித்துறை சார்பில், பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, வழிகாட்டல் பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கான செலவை ஈடுகட்ட அதிகாரிகள் 'ஸ்பான்சர்' தேடி அலைகின்றனர்.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) சார்பில், இந்தாண்டு முதல், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு உயர் படிப்புகள், வேலைவாய்ப்பு ஆலோசனை வழங்கி வழிகாட்டல் பயிற்சி முகாம்கள் நடத்த உத்தரவிட்டுள்ளது. இதன்படி 388 கல்வி ஒன்றியங்களிலும் ஏப்.,6 மற்றும் 7ல் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. 

இதற்காக முகாம் நடத்த இடம், மாணவர்களுக்கு எழுதுபொருள், கையேடு வழங்கி, பிஸ்கட் மற்றும் டீ அல்லது காபி வழங்கவும், அதற்கான செலவை ஈடுசெய்ய தனியார்களிடம் 'ஸ்பான்சர்' பெறவும் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் 'ஸ்பான்சர்' தேடி ஆசிரியர்கள் அலைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இத்துறை செயலாளராக சபிதா இருந்தபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை, இந்த நிகழ்ச்சி நடத்தவும், அதற்காக பள்ளிகள், தனியார் கல்யாண மண்டபங்களில் மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்யாண மண்டபம் என்றால், ஆயிரக்கணக்கில் வாடகை கொடுக்க வேண்டும். 


'மாணவர்களுக்கு நோட்டு, பேனா, டீ, பிஸ்கட், மதியம் உணவு வழங்குங்கள். அதற்கு ஆகும் செலவை தனியார்களிடம் 'ஸ்பான்சர்' பெற்று சமாளியுங்கள்,' என அதிகாரிகள் கூறுகின்றனர். மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்து வழிகாட்டுவது நல்ல விஷயம் தான். அதற்காக ஆசிரியர்களை தனியார்களிடம் 'கையேந்த வைப்பது நியாயம் தானா' என்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக