பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை, இடம் மாற்றம் செய்ய வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில், 37 ஆயிரத்து, 200 அரசு பள்ளிகளும், 8,400 அரசு உதவி பெறும் பள்ளிகளும் உள்ளன. இவற்றில், 85 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கு கற்பிக்க, ௩.௧௬ லட்சம் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே இடத்தில் பணி புரிகின்றனர்.
இதனால், கற்பித்தலில் சோர்வு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். குறைந்த பட்சம், ஒரு பள்ளியை விட்டு மற்றொரு பள்ளிக்கு கூட அவர்கள் மாற்றப்படுவதில்லை.
பதவி உயர்வின் போது, வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டாலும், ஒரே ஆண்டில், இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்று, சொந்த மாவட்டத்திற்கு பணி மாறுதல் பெற்று விடுகின்றனர்.
புதிதாக நியமிக்கப்படுவோரும், விருப்பமில்லாத இடத்தில் பணி கிடைத்தால், ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக பணியாற்றுவதில்லை. அதனால், பல மாவட்டங்களில் ஆண்டுக்கணக்கில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இது குறித்து, பெற்றோர் கூறியதாவது: அரசு ஊழியர்கள், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்ற அனுமதியில்லை. ஆனால், பள்ளிக்கல்வித் துறையில், ஆண்டுக்கணக்கில் ஒரே இடத்தில் பணியாற்றுகின்றனர். கற்பித்தல் தவிர, தங்கள் சொந்த தொழில்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எனவே, ஐந்து ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும். புதிதாக நியமிக்கப்படுவோர், பதவி உயர்வு பெறுவோர், பொறுப்பேற்கும் இடத்தில், ஐந்து ஆண்டுகளாவது பணியாற்றும் வகையில், விதிகளை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக