லேபிள்கள்

10.6.17

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் இல்லை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

வரி ஏய்ப்பை தடுக் கும் வகையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர் கள் தங்கள் வருமான வரி கணக்கு எண்ணுடன் (பான் கார்டு) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில்
உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

அத்துடன், வருகிற ஜூலை 1–ந் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்றும் அறிவித்தது. இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து பினோய் விஸ்வம் உள்ளிட்ட சிலர் 
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

அந்தரங்க தகவல்கள்

இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், மத்திய அரசு வருமான வரி சட்டத்தில் சேர்த்துள்ள 139 ஏஏ என்ற புதிய பிரிவு பாரபட்சமானது என்றும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் தொழில் மற்றும் உரிமைகளில் தேவை இல்லாமல் தலையிடும் செயல் என்றும், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலம் அந்தரங்க தகவல்கள் கசியும் ஆபத்து உள்ளது என்றும் கூறப்பட்டு இருந்தது. 

எனவே வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர் கள், தங்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மத்திய அரசு வக்கீல் வாதம்

இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி வாதாடுகையில், போலியான பான் கார்டுகளை பயன்படுத்தி கருப்பு பணம் புழக்கத்தில் விடப்படுவதாகவும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுவதாகவும், இதை தடுக்க பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியம் என்றும் கூறினார். 

அரசின் பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்தியதன் மூலம் அரசு ரூ.50 ஆயிரம் கோடியை சேமித்து இருப்பதாகவும் அவர் தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

நீதிபதிகள் தீர்ப்பு

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து கடந்த மாதம் 4–ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நீதிபதிகள் நேற்று தீர்ப்பு வழங்கினார்கள்.
அவர்கள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:– மத்திய அரசின் உத்தரவு பாரபட்சமானது என்று கருதமுடியாது. மத்திய அரசின் உத்தரவால் போலி பான் கார்டுகள் பெருகுவது கட்டுப்படுத்தப்படும்.

ஆதார் எண்கட்டாயம் அல்ல

மேலும் தற்போது ஆதார் எண் வைத்திருப்பவர்கள் அந்த எண்ணை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். அதே சமயம் ஆதார் எண் இல்லாதவர்களின் பான் கார்டை மத்திய அரசு ரத்து செய்யக்
கூடாது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் அல்ல. ஆதார் எண் இல்லாதவர்களிடம் ஆதார் எண்ணை தருமாறு வற்புறுத்தக்கூடாது. ஆதார் எண் இல்லாதவர்கள் மற்றும் ஆதார் கார்டுக்காக விண்ணப்பம் செய்து இருப்பவர்கள் ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைக்க தேவை இல்லை.    

ஆதார் திட்டத்தின் மூலம் பயனாளிகளின் கைரேகை போன்ற முக்கியமான தகவல் கள் கசியாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று ஏதேனும் தகவல் கசியும் பட்சத்தில் அது தொடர்பான நிறுவனங்கள் அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.

அரசியல் சாசன அமர்வு  

இது தனிப்பட்ட நபர்களின் அந்தரங்க தகவல்கள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட  பிரச்சினை என்பதால் இந்த வழக்கை கடந்த 2015–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து முடிவு எடுக்கும். அதுவரை ஆதார் எண்ணை இணைக்காத பான் கார்டு செல்லாது என்று அறிவிக்கக்கூடாது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக