லேபிள்கள்

11.5.18

மூடப்படுவதால், 28 என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இல்லை அதிகாரி தகவல்

தமிழகத்தில் 28 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படுவதால் அந்த கல்லூரிகளில் வருகிற (2018-2019) கல்வி ஆண்டுக்கு பி.இ. மாணவர்
சேர்க்கை இல்லை என்று அகில இந்திய தொழில்நுட்ப குழு மண்டல தலைவர் பாலமுருகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 562 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கையை அண்ணாபல்கலைக்கழகம் வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்த வருடம் அதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் பெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகில இந்திய தொழில்நுட்பக்குழுவின் மண்டல தலைவர் பாலமுருகன் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் 28 கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளை மூடக்கோரி அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவிற்கு விண்ணப்பித்துள்ளன. அந்த கல்லூரிகளை மூட அனுமதி இன்னும் வரவில்லை. ஆனால் அனுமதி வந்தாலும் வரவில்லை என்றாலும் கல்லூரிகள் மூடவேண்டும் என்று முடிவு செய்து விண்ணப்பித்து விட்டால் அந்தக்கல்லூரிகள் இந்த வருடம் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது. நடத்தவும் மாட்டார்கள்.

ஆனால் அந்த கல்லூரிகளில் 2-வது ஆண்டு, 3-வது ஆண்டு, 4-வது ஆண்டு நடத்துவது உண்டு. அதனால் மாணவர்கள் அந்த கல்லூரிக்கு செல்வார்கள். ஆனால் புதிதாக மாணவர் சேர்க்க மாட்டார்கள். இந்த கல்லூரிகள் அனைத்தும் அண்ணாபல்கலைக்கழகம் நடைபெற உள்ள கலந்தாய்வில் கல்லூரிகளின் பட்டியல் இடம் பெறாது.

நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான அனுமதி பெறவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 23 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளன.

இவ்வாறு பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

மூடப்படும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மிகக்குறைவாக இருந்தது. அதன் காரணமாக தான் இந்த கல்லூரிகள் மூடும் நிலையில் உள்ளன. இன்னும் பல கல்லூரிகளும் மூடப்படும் நிலையில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக