லேபிள்கள்

8.10.13

6,545 ஆசிரியர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் : முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

பள்ளிக்கூடங்களில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் நியமனம்
தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருதி முதல்அமைச்சர் ஜெயலலிதா, அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப ஆணையிட்டுள்ளார்கள்.
பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மற்றும் பிளஸ்–2 வகுப்பு மாணவர்கள் அந்த தேர்வுக்கு தயார்செய்வதற்கு இந்த ஆணை மிகவும் உறுதுணையாக அமையும்.
6,545 ஆசிரியர்கள்
தற்போதைய நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளிகள், அரசு மேல்நிலைப்பள்ளிகள், நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள், நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களில் காலியாக உள்ள 2,645 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்படும்.
அதுபோல 3 ஆயிரத்து 900 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்ப அனுமதி அளித்தும் இதற்கான நிதி ரூ.20 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்தும் முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
இந்த நியமனத்தை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களே பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணையோடு உடனடியாக மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக