மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,), பதவி உயர்வு தொடர்பாக, தனித் தனியாக அனுப்பப்பட்ட உத்தரவுகளால்,
கல்வித்துறையின் வெளிப்படை
தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. இந்த விஷயத்தில், இத்துறையில் முதல்வர்
சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கல்வித் துறையில் இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு அறிவிக்கப்படும் முன், பணிமூப்பு பட்டியல் வெளியிடப்படும். முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பெயர்கள், முதன்மை கல்வி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆனால், இரு நாட்களுக்கு முன், டி.இ.ஓ., க்கள் பதவி உயர்வு, 10 டி.இ.ஓ., க்கள் பணிமாறுதல் ஆகியவை, மிக ரகசியமாக நடந்துள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, தனித் தனியாக உத்தரவுகளை அனுப்பி வைத்து, கல்வித்துறை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பதவி உயர்வு பெற்ற, டி.இ.ஒ.,க்கள் யார் யார்? என்பது கூட, உடன் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது. இதேபோல் மரபுமீறி பல சம்பவங்கள், சமீபகாலமாக அரங்கேறி வருவதாக, ஆசிரியர் சங்கங்கள் குற்றம்சாட்டப்படுகின்றன. உதாரணமாக, இயக்குனர், இணை இயக்குனர், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் என்ற "ஆர்டர்" படிதான், பதவி உயர்வு அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால் இந்த ஆண்டு, மாவட்ட கல்வி அலுவலர்கள், அதன் பின், முதன்மை கல்வி அலுவலர்கள் என, பதவி உயர்வு அறிவிக்கப்பட்டது. வெளிப்படையாக அறிவிக்க வேண்டிய டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வும், தற்போது சத்தமில்லாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தனித்தனியாக, 26 டி.இ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் "பின்னணி" தெரியவில்லை. கடந்த முறை பதவி உயர்வு அளிக்கப்பட்ட டி.இ.ஓ.,க்களில், 20 பேருக்கு, ஒரே வாரத்தில் மீண்டும் பணி மாற்றம் வழங்கப்பட்டது. கல்வித் துறையில் என்ன நடக்கிறது? என குழப்பமாக உள்ளது. இத்துறையில் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக