தொடக்கக் கல்வித் துறையில் 37 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள், 9,438 நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
50 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷ அபியான்) துவக்கப்பட்டது.
கட்டமைப்பு வசதிகள்:அதன் நோக்கம், ஆறு முதல், 14 வயதுடைய குழந்தைகள் அனைவரும், இடைநிற்றல் இன்றி, ஆரம்பக் கல்வியை முடிக்க வேண்டும். மேலும், 1 கி.மீ., தூரத்துக்குள், ஒரு தொடக்கப் பள்ளியும், 3 கி.மீ., தூரத்துக்குள், ஒரு நடுநிலைப் பள்ளியும் துவங்கப்பட்டு,
அதற்கு தேவையான கட்டடம், கழிப்பறை, உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தி, கற்பித்தலுக்குத் தேவையான ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டனர்.
கடந்த, 2002ம் ஆண்டு முதல், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், பள்ளி மானியம் மற்றும் பராமரிப்பு மானியத் தொகையாக, தொடக்கப் பள்ளிகளுக்கு, 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய், நடுநிலைப் பள்ளிகளுக்கு, 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இத்தொகையை, முறையாக செலவு செய்யும் வகையில், பள்ளிக்கும், பள்ளி அமைந்துள்ள கிராமத்துக்கும் தொடர்பு ஏற்படுத்தும் வகையில், எஸ்.எஸ்.ஏ., சார்பில் வழங்கப்படும் நிதி, முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கண்டறிய, கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண் குழு அமைக்கப்பட்டது.மாதம் ஒரு முறை கூட்டம் நடத்தி, பள்ளி வளர்ச்சிக் குறித்தும், நிதியை முறையாக பள்ளி வளர்ச்சிக்கு பயன்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு,
தீர்மானம் நிறைவேற்றப்படும்.
போலி அறிக்கை:எஸ்.எஸ்.ஏ., விதிமுறைப்படி, மாதந்தோறும் வி.இ.சி., - எஸ்.எம்.சி., கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், அவற்றை பெரும்பாலான தலைமையாசிரியர்கள் நடத்துவதில்லை. மாறாக, கூட்டம் நடந்ததுபோல், பிரதிநிதிகளிடம் கையொப்பம் பெற்று, போலி அறிக்கையை அனுப்பி வருவதாக புகார் உள்ளது.
பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து, எவ்வித விழிப்புணர்வு நடவடிக்கையும் மேற் கொள்வதில்லை. தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே பெற்றோர்களை சந்தித்து நடவடிக்கை எடுக்கின்றனர். அரசு பள்ளியிலும் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் நடைமுறையில் இல்லை. அரசு பள்ளித் தலைமையாசிரியர்களின் நிர்வாகத் திறமையின்மை காரணமாகிவிடுகிறது.
அதனால், தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்தும், அரசு பள்ளியில் வெகுவாக குறைந்தும் வருகிறது. இது தொடர்பாக, கல்வியாளர்கள் சிலர் கூறியதாவது:தற்போதுள்ள சூழ்நிலையில், பள்ளியை திறம்பட நிர்வாகிக்கவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும், நிர்வாகத் திறமை அவசியம்.பதவி உயர்வின் மூலமே, தலைமையாசிரியர் பணி நியமனம் நடந்து வருகிறது. இந்நிலை மாறி, அரசு பள்ளிகள் புத்துயிர் பெற, 10 ஆண்டுகள் பணிபுரிந்து தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தி, அவர்களை தலைமையாசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
செய்தி; தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக