லேபிள்கள்

27.2.14

ஆசிரியர் தகுதித் தேர்வு: 2012-ஆம் ஆண்டில் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை கோரி வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்

கடந்த 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் சலுகை கோரி தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.மகேஸ்வரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
பி.எஸ்.சி., (வேதியியல்) மற்றும் பி.எட்., படித்துள்ளேன். கடந்த 2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி நடந்த தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றேன். அதில், 150 மதிப்பெண்களுக்கு 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாகக் குறைத்து தமிழக அரசு கடந்த 6-ஆம் தேதி உத்தரவிட்டது.
அதில் 2013 ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு எழுதியவர்களுக்கும், எதிர் காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் இந்தத் தளர்வு வழங்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணாக 82 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நான் 2012-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் 85 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். 2013-ஆம் ஆண்டிலும், எதிர்காலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்குவது போல், எனக்கும் தேர்ச்சி விகிதத்தில் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு புதன்கிழமை (பிப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த மனுவுக்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக