லேபிள்கள்

25.2.14

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் சிரமம் ஆங்கிலம் படும்பாடு : மாநகராட்சி பள்ளி மாணவர்கள் தவிப்பு


கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில், பல ஆண்டுகளாக ஆங்கிலம் மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து வருகிறது. இதனால், பிற பாட ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை கையாளும் அவலநிலையில் பள்ளிகள் செயல்பட்டுவருகிறது.
மாநகராட்சியின் கட்டுப்பாட்டில், 16 மேல்நிலைப்பள்ளிகள், 11 உயர்நலைப்பள்ளிகள், 15 நடுநிலைப்பள்ளிகள், 41 ஆரம்பப் பள்ளிகள், என மொத்தம் 83 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாத கணக்கெடுப்பின் படி, 83 பள்ளிகளிலும் சேர்த்து மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 550 மட்டுமே. இப்பள்ளிகளில், ௧:௪௦ என்ற விகித அடிப்படையில், ௯௦௦ ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களின் சேர்க்கை குறைவால் கடந்த எட்டு ஆண்டுகளில் ஐந்து ஆரம்பப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தனியார் பள்ளிகளுடன் போட்டியிட முடியாமல், தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கையில் பெரும் சரிவை சந்தித்து வருவதை அறிந்து, கடந்த ஆண்டு அனைத்து ஆரம்பப்பள்ளிகளிலும் ஆங்கில வகுப்புகள் துவக்கப்பட்டன. சில ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வகுப்பை துவங்கும் அளவுக்கு கூட மாணவர்கள் சேர்க்கை இல்லை என்பதே உண்மை.
தற்போது, செயல்பட்டு வரும் ௧௧ மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் ஆங்கில ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. மாணவர்கள் சேர்க்கை குறைவு என்பதால் இப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக தெரிகிறது. 
பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் பல ஆண்டுகளாக மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். 
பள்ளி தலைமையாசிரியர்களே முதன்மை கல்வி அதிகாரிகள் பொறுப்பில் இருப்பதால், அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதிலும், கலந்தாய்வு, ஓய்வூதிய பலன்கள் என தாமதம் ஏற்பட்டு வருகிறது. 
மாநகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை, பொதுத்தேர்வுகளில் பெரும்பாலான மாணவர்கள் ஆங்கில பாடத்தில் பின்தங்கியுள்ளனர். இதற்கு, ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறை முக்கிய காரணம் என்று பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தாமதத்துக்கு காரணம் என்ன?
கோவை மாநகராட்சி அனைத்து ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் சரவணமுத்து கூறுகையில்,''மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. குறிப்பாக, அனைத்து உயர்நிலைப்பள்ளிகளிலும் ஆங்கில ஆசிரியர்கள் இல்லை. இதனால், பிற பாடங்களை கையாளும் ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை எடுக்கவேண்டிய நிலை உள்ளது. ஆங்கிலத்தில் புலமை பெற்ற ஆசிரியர்கள் அளவுக்கு, பிற பாடங்களில் புலமை பெற்றவர்களால் அப்பாடத்தை கையாள்வது சிரமம். அறிவியல் பாட ஆசிரியர்களும் குறைவாக உள்ளனர். இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அரசு பள்ளிகளை கவனிப்பது போன்று மாநகராட்சி பள்ளிகளில் நிரந்தரமான முதன்மை கல்வி அதிகாரி இல்லாததால், அரசாணைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாத நிலையே உள்ளது. பள்ளி தலைமையாசிரியர்கள் அல்லாமல், நிரந்தர கல்வி அதிகாரிகளை மாநகராட்சி பள்ளிகளை கவனிக்க நியமிக்கவேண்டும், '' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக