லேபிள்கள்

25.2.14

கல்வித் துறை அதிகாரிகளுக்கு நடைமுறை சிக்கல் தெரியவில்லை : ஆசிரியர் சங்க நிர்வாகி "அட்டாக்'

கல்வித் துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை சிக்கல் தெரியவில்லை. 10ம் வகுப்பு, பொதுத்தேர்வுக்கான நேரத்தை, பழையபடி மாற்றாவிட்டால்,
தேர்ச்சி சதவீதம், கண்டிப்பாக குறையும்,'' என, தமிழ்நாடு அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர்,  தெரிவித்தார்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, காலம், காலமாக, காலை 10:00 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. சில ஆண்டுகளாக, கேள்வித்தாளை படித்துப் பார்க்க, 10 நிமிடம், விடைத்தாளில், மாணவர் குறித்த விவரங்களை பதிவு செய்ய, 5 நிமிடம் என, 15 நிமிடம் வழங்கப்படுகிறது. இதனால், விடை எழுதுவதற்கான நேரம், 10:15க்குத் தான் துவங்குகிறது. இந்நிலையில், "வரும் பொதுத்தேர்வில், 10ம் வகுப்பிற்கு மட்டும், ஒரு மணி நேரம் முன்னதாக, காலை 9:15க்கே, தேர்வு துவங்கும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. வெயில் காரணமாக, தேர்வு, முன்கூட்டியே துவங்குவதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இது தேர்வின்போது, பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என, ஆரம்பத்தில் இருந்து, பல ஆசிரியர் சங்கங்கள், அலாரம் அடித்து வருகின்றன. பொதுத்தேர்வு தொடர்பாகவும், அரசுப் பள்ளிகளில், தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என, வலியுறுத்தவும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் கூட்டம், சென்னையில், இன்று காலை நடக்கிறது. அமைச்சர் மற்றும் அதிகாரிகள், கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், சங்க பொதுச் செயலர், சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: கல்வித் துறை அதிகாரிகளுக்கு, நடைமுறை பிரச்னைகள், சிக்கல்கள் தெரியவில்லை. கிராமப்புறங்களில், 3 4 கி.மீ., தூரம் சென்று, அரசுப் பள்ளிகளில், மாணவர்கள் படிக்கின்றனர். தற்போதுள்ள நேரத்தின்படி, தேர்வெழுத, காலை 8:00 மணிக்கே, தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும். இதனால், விடியற்காலையில் கிளம்பி, தேர்வு மையத்திற்கு செல்வதற்குத் தான், மாணவர்களுக்கு நேரம் இருக்கும். கடைசி நேரத்தில், தேர்வுக்கு தயாராக, மாணவர்களுக்கு நேரம் இருக்காது. என்னதான், ஒரு ஆண்டு முழுவதும் படித்திருந்தாலும், கடைசி நேரத்தில், அனைத்து பாட பகுதிகளையும், ஒரு முறை புரட்டினால் தான், அதே நினைவுடன், மாணவர்களால், நன்றாக தேர்வு எழுத முடியும். குறிப்பாக, தேர்ச்சியின் விளிம்பில் உள்ள மாணவர்களுக்கு, இது மிகவும் அவசியம்; புதிய நடைமுறையால், இதற்கு வாய்ப்பே இல்லை. இதனால், தேர்ச்சி சதவீதம் கண்டிப்பாக குறையும்.
தேவையில்லாமல், தேர்வு விவகாரங்களில், குட்டையை குழப்பாமல், பழைய நேரத்தின்படி, தேர்வை நடத்த, அரசு முன்வர வேண்டும். என அவர் தெரிவித்தார்.
நேரத்தை மாற்றியதால் ஏற்படும் பாதிப்பு குறித்து, அதிகாரிகள், வாய் திறக்க மறுக்கின்றனர். நேரத்தை மாற்றியது, முதல்வர் என்பதால், "ஒரு பிரச்னையும் வராது' என, கோரசாக கோஷம் போடுகின்றனர். இது, எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக