லேபிள்கள்

27.2.14

"ஸ்டிரைக்' செய்யும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரிக்க உத்தரவு : கலக்கத்தில் ஆசிரியர்கள்

மாநிலம் முழுவதும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பட்டியலை, தொடக்க கல்வி இயக்குனர்
அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், மத்திய அரசுக்கு இணையான ஊதியம், ஆசிரியர் தகுதி தேர்வு ரத்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும், 60 ஆயிரம் ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில், கடந்த இரு நாட்களாக ஈடுபட்டனர். கடந்த, 25ம் தேதி பள்ளிக்கு வருகை புரிந்தும், பாடம் நடத்தாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் கட்டமாக, நேற்று, தற்செயல் விடுப்பு பெற்று, பள்ளிக்கு வருவதை தவிர்த்தனர். போராட்டத்தின் போது, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை பயன்படுத்திக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உத்தரவிட்டார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, மாவட்ட வாரியாக, தலைமை அலுவலகத்திற்கு அனுப்ப, தொடக்க கல்வி இயக்குனர், நேற்று, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையின் மூலம் உத்தரவிட்டுள்ளார். இது, ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை அதிகாரி ஒருவர் கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, அரசு பணியாளர் ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை விதிமுறைகளின் படி, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. நேற்று, தற்செயல் விடுப்பு பெற்று, போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளின் மூலம், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை அடங்கிய பட்டியல், சென்னைக்கு, நேற்று காலை, 11:00 மணிக்கு, இ மெயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக