ராமநாதபுரம் மாவட் டம் கடலாடி ஒன்றியம், சின்னபொதிகுளம் ஊராட்சியில் ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 5 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் தலைமையாசிரியர், இடைநிலை ஆசிரியை, சத்துணவு பொறுப்பாளர், சமையல்காரர் என 4 பேர் பணியில் உள்ளனர். இந்த பள்ளியில் பயிலும் 5 மாணவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி. ஒருவர் முதல் வகுப்பில் சேருவதற்கான வயதை எட்டவில்லை.
இதனால் 3 மாணவர்களுக்கு மட்டுமே பாடம் நடத்தப்படுகிறது. மதிய வேளைக்கு பின்னர் தலைமையாசிரியர் பள்ளியை மூடி விட்டு செல்வதாக புகார் எழுந்துள்ளது.
சின்னபொதிகுளம் மக்கள் கூறுகையில், ‘’எங்கள் ஊரில் 10 குடும்பங்கள் மட்டுமே உள்ளனர். சிலர் பிழைப்பு தேடி நகர பகுதிகளுக்கு சென்று விட்டனர். கடந்த ஆண்டு இந்த பள்ளியில் 13 மாணவர்கள் படித்தனர். மதிய வேளைக்கு பின்னர் தலைமையாசிரியர் பள்ளியை மூடி விட்டு செல்வதால் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது” என்றனர். கடலாடி ஒன்றிய தொடக்க கல்வி அலுவலர் ரவிக்குமார் கூறிகையில் ‘’கடந்த சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கு சென்றோம். அப்போது பள்ளி பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து மாவட்ட அதிகாரிகள் கவனத்துக்கு எடுத்து சென்றுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக