லேபிள்கள்

12.8.14

வகுப்பறைக்கு செல்லும் ஆசிரியர்கள், கண்டிப்பாக மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது,'' என, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம், திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. அதில், முதன்மை கல்வி அலுவலர் முருகன்  பேசியதாவது: ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக, அவர்களுக்கு தீவிர வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும். வாரத்தில் இரண்டு பாட வேளைகளை ஒதுக்கி, மாணவ, மாணவியருக்கு அகராதி (டிக்ஸ்னரி) கற்பிக்க வேண்டும். வார்த்தைகளை தவறின்றி எழுதவும், உச்சரிக்கவும், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது முக்கியம்.

ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு தரப்படும் சிறப்பு பயிற்சிகளில், தவறாமல் பங்கேற்க வேண்டும். படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்த வேண்டும். அடுத்த ஆண்டில், பொதுத்தேர்வு எழுத உள்ள ஒன்பதாம் வகுப்பு மாணவர்களை, நடப்பு கல்வியாண்டிலேயே சிறப்பு 
கவனம் செலுத்தி, அவர்களை தேர்ச்சிக்கு தயார்படுத்துவது அவசியம். இதற்கான சிறப்பு தேர்வுகளை அடிக்கடி நடத்தி, அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி தருவது அவசியம்.

வகுப்புகளுக்கு செல்லும்போது ஆசிரியர்களும், கட்டாயம், "டிக்ஸ்னரி' எடுத்துச் செல்ல வேண்டும். அரசு தரப்பில் வழங்கப்படும் கல்வி நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களை சென்றடைய, ஆசிரியர்கள் முழுமையான கவனம் செலுத்துவது முக்கியம். கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்களுக்கு, வங்கிகளில் புதிய கணக்கு துவங்க ஆசிரியர்கள் கட்டாயம் உதவ வேண்டும். ரேஷன் கார்டு இல்லாத, முகவரி சான்று அளிக்க முடியாத மாணவர்களுக்கு, பள்ளி சார்பில் சான்று வழங்கலாம். இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தலைமை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து ஆலோசித்து, மாணவர்களுக்கு உதவ வேண்டும். வகுப்பறையில், எக்காரணத்தைக் கொண்டும், ஆசிரியர்கள் மொபைல் போன் பயன்படுத்தக்
கூடாது; மாணவர்கள் மீது மட்டுமே முழு கவனம் செலுத்தி பாடம் கற்பிக்க வேண்டும்.இவ்வாறு, முருகன் பேசினார்.


மாவட்ட கல்வி அலுவலர் கரோலின் உட்பட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், சுயநிதி பள்ளிகளை சேர்ந்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 200 பேர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக