பட்டியல் சாதியினர், பழங்குடிகள் சமூகப்பிரிவு களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பிளஸ் டூ படிப்புக்குப் பிறகான படிப்புகளுக்காகத் தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. அது மாணவர்களுக்குப் போய்ச்சேருவதை உத்தரவாதப் படுத்துவதற்காக மாவட்ட அளவில் கண்காணிப்பதற்கான குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதற்காகத் தமிழக அரசு ஆணை எண் 44 (தேதி: 15.07.2014) வெளியாயுள்ளது.
பிளஸ் டூ படிப்புக்கு பிந்தைய படிப்புகளை அரசு உதவி பெறுகிற மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் நடத்துகின்றன. அவற்றில் பயிலும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடி இனங்களைச் சார்ந்தவர்கள், கிறிஸ்துவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்கள் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்குத் திருப்பிச் செலுத்தப்படாத கட்டாயக் கல்விக் கட்டணங்களை மத்திய அரசு நிதி மூலம் தமிழக அரசு வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெறும் பட்டியல் சாதியினர், பழங்குடிகளின் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
என மாற்றி அறிவிக்கப் பட்டுள்ளது. கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்ற நிலை நீடிக்கிறது.
இந்தக் கல்வி உதவித் தொகைக்காக ஒதுக்கப்படுகிற நிதி முறையாக மாணவர்களுக்குப் பயனளிக்கு மாறு போய்ச்சேர்கிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஆறுபேர் கொண்ட கண்காணிப்புக் குழுக்களை மாவட்டந்தோறும் அமைத்து இந்த அரசாணை உத்தரவிட்டுள்ளது.
சம்மந்தப்பட்ட மாணவர்களிடம் இந்தக் கல்வி உதவித்தொகையைத் தனியார் கல்வி நிறுவனங்கள் வசூலிக்கக் கூடாது. அரசாணையை மீறி கல்லூரி நிர்வாகங்கள் செயல்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணை எச்சரிக்கிறது.
தங்களிடம் படிக்கிற பட்டியல் சாதியினர், பழங்குடியினர் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையைக் கல்லூரி நிர்வாகங்கள் தமிழக அரசிடம் கேட்டு மனுச்செய்தவுடன் சம்மந்தப்பட்ட மாணவர்கள் அதை அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களின் பெயர்ப் பட்டியலைக் கல்லூரிகளின் அறிவிப்பு பலகையில் உடனே வெளியிட வேண்டும். மாவட்டக் கண்காணிப்புக்குழு மாதந்தோறும் குறைந்தபட்சம் 10 கல்வி நிறுவனங்களையாவது ஆய்வு செய்ய வேண்டும்.
கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை முடிந்ததும், அனைத்துக் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளின் கூட்டத்தை மாவட்டக் கண்காணிப்புக் குழு கூட்டி அதில் மாணவர்களின் கல்விக் கட்டண உரிமைகள், விவரங்கள் பற்றித் தெளிவுபடுத்த வேண்டும். மாதா மாதம் இந்தக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றி மாநில அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் இந்த அரசு ஆணை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக