விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக செயல்படவிடாமல், தனி அதிகார மையமாக செயல்பட்ட ஆங்கில பட்டதாரி ஆசிரியரை கல்வித் துறை 7-ம் தேதி (வியாழக்கிழமை) தற்காலிக பணி நீக்கம் செய்தது. திங்கள்கிழமை பள்ளியை செயல்படவிடாமல் தடுத்து, சக ஆசிரியர்களையும் பணி செய்ய விடாமல் தடுத்ததாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, குன்னூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு சேதுநாராயணபுரத்தைச் சேர்ந்த ரா.பாலமீனா என்பவர் தலைமை ஆசிரியையாக உள்ளார். இப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக லட்சுமியாபுரம் கிராமத்சைச் சேர்ந்த ச.வெற்றிவேல் செழியன் என்பவர் வேலை செய்து வந்தார்.
வெற்றிவேல் செழியன் தலைமை ஆசிரியையை தன்னிச்சையாக செயல்படவிடாமல் தனி அதிகார மையமாக செயல்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை எந்த ஒரு செயல் செய்யச் சொன்னாலும் அதற்கு எதிர்மறையாக செய்வதுடன், ஊர்மக்களில் சில நபர்களை பயன்படுத்தி தலைமை ஆசிரியை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டு வந்துள்ளார். இது குறித்த புகார்களின் பேரில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் குற்றச்சாட்டுகள் உண்மையானவை என்று தொடக்கக் கல்வித் துறைக்கு தெரியவந்ததையடுத்து ஆசிரியர் வெற்றிவேல்செழியன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவு அவருக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டது. ஆசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்ததைக் கண்டித்து, அன்று மதியம் மாணவர்களை பெற்றோர் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
திங்கள்கிழமை ஒரு சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளார்கள். அவர்களது பெற்றோருக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக அவர்களும் வந்து தங்களது பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டனர். இதற்கிடையே கிருஷ்ணன்கோவில் காவல் ஆய்வாளர் சின்னப்பாண்டி மற்றும் கல்வி அலுவலர்கள் பேச்சுவார்த்தைக்கு பெற்றோர்களை அழைத்தனர். ஆனால் பேச்சு வார்த்தையில் ஊரில் உள்ள 9 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அவர் மீண்டும் பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியரை இதே பள்ளியில் வேலையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால், முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையில் வத்திராயிருப்பு கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சையது அலி பாத்திமா கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாலை ஒரு புகார் அளித்தார். அதில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ச.வெற்றிவேல் செழியனின் நடத்தை குறித்து பள்ளி தலைமை ஆசிரியை பாலமீனா அளித்த அறிக்கையின் பேரில், ஆசிரியர் வெற்றிவேல் செழியன் வியாழக்கிழமை முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் தலைமை ஆசிரியராக தற்போது மணிமாறன் என்ற ஆசிரியர் பொறுப்பு வகிக்கிறார். அவர் தனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். ஆனால் மாணவர்கள் வரவில்லை என்று தகவல் அளித்தார். அதன்பேரில் பள்ளிக்குச் சென்று விசாரித்தேன். பள்ளியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் வெற்றிவேல் செழியனின் தூண்டுதலின் பேரில் பெற்றோர் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்துள்ளது தெரியவந்தது. மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமலும் தடுத்துள்ளனர்.
இதன்பேரில் போலீஸார் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர் வெற்றிவேல் செழியன், மு.சௌந்தரபாண்டியன், ச.திருமால் அழகர், மா.நாகராஜ், ச.முகேஸ், சு.முருகன், சு.லெனின் குமார், மாரியப்பன் மனைவி சீனியம்மாள், தர்மர் மகள் முனீஸ்வரி, மகேஸ்வரன் மனைவி பசுபதி, முருகன் மகள் மாரீஸ்வரி, பெ.செல்லையா மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து இவர்களைத் தேடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக