கும்பகோணம் அருகேயுள்ள குடிதாங்கி தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தி.செழியன். திருப்புறம்பியம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலராகப் பணியாற்றி வருகிறார். இவரது இளையமகன் இளமாறன் (6). திருப்புறம்பியத்தில் உள்ள தனியார் பிரைமரி பள்ளியில் 2-ஆம் வகுப்பு படிக்கிறார்.
கடந்த 20-ஆம் தேதி, பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவர் மீது ஆசிரியை அருள்ஜோதி இரும்பு ஸ்கேலை வீசியுள்ளார். அது, இளமாறனின் வலது கண் மீது பட்டு, ரத்தம் கொட்டியுள்ளது.
இதையடுத்து, கும்பகோணத்தில் உள்ள கண் மருத்துவரிடம் இளமாறனை, ஆசிரியர்கள் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். காயம் கடுமையாக இருந்ததால் உடனடியாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு இளமாறனை அழைத்துச் சென்றனர். அங்கு, மாணவருக்கு வியாழக்கிழமை அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. எனினும், மாணவருக்கு மீண்டும் பார்வை கிடைப்பது குறித்து மருத்துவர்கள் உறுதி தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், சுவாமிமலை காவல் நிலையத்தில் மாணவரின் பெரியப்பா தி.குமார் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதில், மாணவரின் கண் பாதிக்கப்படக் காரணமாக இருந்த ஆசிரியை, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில், ஆசிரியை அருள்ஜோதி மீது வழக்குப் பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக