உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான கால அட்டவணையை தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.பாலசுப்பிரமணியன் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டத்தின்படி, அரசு அங்கீகாரம் பெறாமல் எந்தத் தனியார் பள்ளியும் செயல்பட முடியாது. ஆனால், சென்னையில் 700-க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன. அந்தப் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் பாதிப்புகளை அடைந்துள்ளனர்” என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோரைக் கொண்ட முதன்மை அமர்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் குறிப்பிட்டிருந்ததாவது:
அங்கீகாரம் பெறாமல் செயல்படும் பள்ளிகளுக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பப்படும். அது தொடர்பாக அக்டோபர் 15-ம் தேதிக்குள் பள்ளிகள் பதிலளிக்க வேண்டும். பள்ளியை அங்கீகரிக்கும்படி கோரும் விண்ணப்பதையும் பள்ளிகள் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகள் நவம்பர் 30-ம் தேதிக்குள் பள்ளிகளில் ஆய்வு நடத்தி, ஜனவரி 31-ம் தேதிக்குள் இறுதி உத்தரவுகளைப் பிறப்பிப்பார்கள்.
ஆய்வின்போது பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கும்படி உரிய முறையில் பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்தால், அங்கீகாரம் வழங்குவது பற்றி கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள். அங்கீகாரம் பெறவே தகுதியில்லாத பள்ளி என தெரிய வந்தால், பள்ளியை மூடுவதற்கான நோட்டீஸை உடனடியாக அதிகாரிகள் விநியோகிப்பார்கள்.
அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அருகேயுள்ள அரசு அல்லது தனியார் பள்ளிகளில் உடனடியாக அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இதனையட ுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
அரசின் மனுவில் கூறியுள்ளவாறு நடவடிக்கை எடுத்தால் தங்களுக்கும் திருப்திதான் என மனுதாரர் தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆகவே, மனுவில் கூறியுள்ளவாறு கல்வித் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகள் தொடர்பாக அரசு பிறப்பிக்கும் அனைத்து சுற்றறிக்கைகளையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஹேமா சம்பத் கூறியுள்ளார். அதனை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம். அனைத்து சுற்றறிக்கைகளும் 2 வாரங்களுக்குள் பதிவேற்றம் செய்யப்படும் என அரசு தலைமை வழக்கறிஞரும் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக