லேபிள்கள்

6.9.14

பள்ளியில் படிக்கும் போது நீங்கள் செய்த சேட்டை என்ன? மோடியிடம் மாணவர்கள் 'பலே' கேள்விகள்

நாடு முழுவதும் இருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பிரதமர் மோடியிடம் கேள்விகளை அடுக்கினர். அவற்றுக்கு உற்சாகமாகவும் சுவையாகவும் மோடி பதிலளித்தார்.
நான் இந்திய பிரதமர் ஆவது எப்படி?
பிரதமராக வேண்டுமெனில், 2024 லோக்சபா தேர்தலுக்கு இப்போதே தயாராகுங்கள். இது ஜனநாயக நாடு. மக்கள் ஆதரவு இருந்தால் யார் 
வேண்டுமானாலும் தலைவராக வரலாம். நீங்கள் பிரதமராக வருவதற்கு வாழ்த்துக்கள். எப்போது நீங்கள் பிரதமர் ஆகிறீர்களோ, அந்த பதவியேற்பு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுங்கள்.

இந்திய பள்ளி, ஜப்பான் பள்ளி என்ன வித்தியாசம்?
அவர்கள் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றனர். யாரும் பாதியில் படிப்பை விடுவதில்லை; இது அங்கு சட்டமாக உள்ளது.

நீங்கள் மாணவராக இருந்த போது செய்த சேட்டை என்ன?

சேட்டை செய்யாத குழந்தைகள் யாரும் இருக்கிறார்களா... நானும் நிறைய சேட்டை செய்துள்ளேன். கல்யாண நிகழ்ச்சிகளில் நாதஸ்வரம் வாசிக்கும் நிகழ்ச்சிக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவர்கள் முன் நான், புளியம் பழம் சாப்பிடுவேன். வித்வான்கள் நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்தி விடுவர். என்னை அடிக்க ஓடிவருவர்; நீங்கள் யாரும் அப்படி செய்யாதீர்கள்

எங்கள் பகுதியில் உயர்கல்விக்கு என்ன செய்ய போகிறீர்கள்?
நக்சல் பாதித்த பகுதியில் இருந்து நீங்கள் பேசுவது மகிழ்ச்சி. பெண் கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 'மாணவன் படித்தால் அவனுக்கு மட்டுமே அது பயன்படும். பெண் படித்தால், இரண்டு குடும்பங்களுக்கு பயன்படும்' என்றார் காந்தியடிகள். அதே போல பெண்கள் நாட்டுக்காக எத்தனையோ விருதுகளை பெற்று தந்துள்ளனர். பள்ளிகளில் கழிப்பறை இல்லாததால் தான் பெண்கள் பாதியில் படிப்பை விடுகின்றனர். அதனால் கழிப்பறை அவசியம் என கூறியுள்ளேன்.

நாட்டின் முன்னேற்றத்துக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
வீட்டுக்கு சென்றவுடன் புத்தக பையை தூக்கி எறியாதீர்கள். சிலர் நன்றாக பராமரிக்கின்றனர். அவர்களை சொல்லவில்லை. உங்கள் பெற்றோர்களிடம் மின்சாரக் கட்டணம் எவ்வளவு என கேளுங்கள்; மின்சாரத்தை குறைவாக பயன்படுத்தி சேமியுங்கள்; மரம் நடுங்கள்; இதுதான் நாட்டின் முன்னேற்றத்துக்கு நீங்கள் செய்யும் பணி.

சுற்றுச்சூழலுக்கு எப்படி உதவுவது?இன்று குழந்தைகள் கூட பருவநிலை மாற்றம் பற்றி கவலைப்படுவது வரவேற்கத்தக்கது. நாம் தான் பருவ நிலையை மாற்றுகிறோம். இயற்கையுடன் சண்டையிடுகிறோம். இன்று நம் கங்கை நதி அசுத்தமாகியுள்ளது. சில வீடுகளில் பெற்றோர், பூமி, நிலவு, இயற்கை ஆகியவற்றுக்கு மரியாதை செய்ய குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கின்றனர்.சமீபத்தில் நாக்பூர் நகர மேயரை சந்தித்தேன். அப்போது அவர், 'முழு நிலவு அன்று தெருவிளக்குகள் அனைத்தையும் அணைத்து விட உத்தரவிட்டேன். அதைப்பார்த்து மக்கள் அனைவரும் வீடுகளில் விளக்குகளை அணைத்து விட்டு, நிலவின் ஒளியை சந்தோஷத்துடன் ரசித்தனர்' என்றார். இதே போல அனைவரும் சூரிய ஒளி, நிலவு ஒளி, இயற்கையை ரசிக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் யாருடைய பங்களிப்பு அதிகம்
அனுபவமே என் முன்னேற்றத்துக்கு காரணம் . அனுபவம், பல வழிகளிலும் கிடைத்தது. சரியான கல்வி கிடைக்கவில்லை எனில், அனுபவம் கூட பலன் தராது. கல்வி மிக முக்கியம். என் ஆசிரியர்கள் மற்றும் கலாசாரத்துக்கு என் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்குள்ளது.

நீங்கள் உலகளவில் புகழ் பெறுவீர்கள் என நினைத்ததுண்டா?

ஒருபோதும் இல்லை. நான் மிகவும் ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது வகுப்பறையில் கூட நான் புகழ் பெறுவேன் என நினைத்ததில்லை. பெரும்பாலான குழந்தைகள் சிறு வயதில் இன்ஜினியர் மற்றும் டாக்டர் ஆவேன் என நினைக்கின்றனர். பிளஸ் 2 முடித்தவுடன் அதை மாற்றிக்கொள்கின்றனர். ஏதாவது பற்றி கனவு காணுங்கள்; அது நடந்து விட்டால் மகிழ்ச்சி; இல்லையென்றாலும் தற்போது என்னவாக இருக்கிறீர்களோ அதை மகிழ்ச்சியுடன் செய்யுங்கள்.

சொந்த வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்டவர்?
(சிரித்துக்கொண்டே) நான் ஒருமுறை என் கிராமத்தில் நடந்த ரோட்டரி சங்க விழாவில் பங்கேற்றேன். அதில் ஒவ்வொருவரும் தங்கள், 'பயோடேட்டா'வை கூறினர். அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும், 3 நிமிடம் மட்டுமே அவர்களை பற்றி சொல்ல முடிந்தது. என்னிடம் கேட்டார்கள். நான் கூறினேன், 'ஒவ்வொருவரும் யார் என தேடிக்கொண்டு தான் உள்ளனர். அது தெரிந்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் நான் யார் என இன்னும் தேடிக்கொண்டு தான் இருக்கிறேன்' என்றேன்; இது தான் உண்மை.

குஜராத், காந்திநகரிலிருந்து டில்லி வந்தததை எப்படி உணர்கிறீர்கள்?
எனக்கு ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. முதல்வராக இருந்த அனுபவம் பிரதமராக செயல்படுவதற்கு பெரிதும் உதவுகிறது. பொறுப்புகள் கூடியிருக்கிறது.

எங்களுடன் கலந்துரையாடுவதால் தங்களுக்கு கிடைப்பது என்ன?
இந்த கலந்துரையாடல் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதுபோக உங்களுக்கு தேசத்தின் முன் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது. என் முகத்தையே பார்த்து வெறுத்துப் போன மக்கள், இன்று உங்கள் முகத்தை பார்த்து மகிழ்ச்சியடைவர்.

நீங்கள் ஆசிரியராக இருந்தால் யாரை கவனிப்பீர்கள். முதல்தர மாணவர்களையா... படிப்பில் பின் தங்கிய மாணவர்களையா... சராசரி மாணவர்களையா... கடினமாக உழைக்கும் மாணவர்களையா... யாருடைய முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள்?
ஆசிரியர் என்பவர் மாணவர்களிடம் வேற்றுமை பார்க்கக் கூடாது. அனைவரையும் ஒன்றாக கருத வேண்டும். ஒவ்வொருவரிடமும் ஒரு சிறப்பம்சம் இருக்கும். அதை ஆசிரியர் வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும். எந்த மாணவருக்கு எது தேவையோ அதை அளித்து அவர்கள் வாழ்வை வளமாக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக