லேபிள்கள்

31.10.14

350 டன் பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி; சி.இ.ஓ., உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

350 டன் எடையுள்ள பள்ளி பாடபுத்தகத்தை விற்று மோசடி செய்ததாக, சென்னை முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2011ல், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த போது தி.மு.க., ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட சமச்சீர் கல்வி பாடபுத்தங்களை, மாணவர்களுக்கு விநியோகம் செய்ய அனுமதிக்கவில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றியும், அவரது திட்டங்கள் குறித்தும், பாடபுத்தகத்தில் இடம்பெற்றதாக காரணம் கூறப்பட்டது.


தமிழ்நாடு அரசு பேப்பர் நிறுவனத்தில் இருந்து பழைய பாடபுத்தகங்கள் கொண்டு வரப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க தயாராக வைக்கப்பட்டன. அ.தி.மு.க., அரசின் முடிவுக்கு எதிராக, தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், சமச்சீர் கல்வி பாடபுத்தகத்தை வழங்க உத்தரவிட்டது. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் சமச்சீர் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டன.

கோவை மாவட்டத்திற்கு, லாரிகளில் கொண்டு வரப்பட்ட 350 டன் எடையுள்ள சமச்சீர் கல்வி அல்லாத பழைய பாட திட்ட புத்தகங்கள், அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் மேற்பார்வையில், ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, புலியகுளம் ஆர்.சி., ஆண்கள் பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.

அந்த பாடபுத்தகங்களை கரையான் அரிப்பதாக கூறி, திடீரென லாரிகளில் ஏற்றி செல்லப்பட்டன. எங்கு கொண்டு செல்லப்பட்டன என்ற விவரமும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், அக்டோபரில், சென்னை சி.இ.ஓ.,வாக இடமாற்றம் செய்யப்பட்டார். பாடபுத்தக விவகாரம் தொடர்பாக, அவரிடம் பள்ளி கல்வி துறை விளக்கம் கேட்டது. ஆனால், அவர் உரிய பதில் அளிக்கவில்லை.

பள்ளி கல்வி துறை செயலாளர் சபீதா, கோவையில் அத்துறை அலுவலர்களிடம் விளக்கம் கேட்டார். அப்போது, அரசு அனுமதி பெறாமல் பாடபுத்தகங்களை விற்று, பணத்தை கையாடல் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, ராஜேந்திரன் கடந்த 17ம் தேதி, சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து, அப்போதைய முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன், சி.இ.ஓ., அலுவலக இளநிலை உதவியாளர் சரவணன், பாடபுத்தக கண்காணிப்பாளர் அருள்ஜோதி, பள்ளி துணை ஆய்வாளர் சாலமன் பிரின்ஸ், பதிவு எழுத்தர் சேதுராமலிங்கம், தமிழ்நாடு பாடபுத்தக கார்ப்பரேசன் தனி அலுவலர் கார்த்திகேயன், புலியகுளம் பள்ளி தலைமையாசிரியர், லூர்து சேவியர் ஆகியோர் மீது, இன்ஸ்பெக்டர் மரியமுத்து வழக்கு பதிந்து, விசாரித்து வருகிறார்.

இந்திய தண்டனை சட்டம், 409வது சட்ட பிரிவின் கீழ் (அரசு சொத்தை கையாடல் செய்தல்) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக