லேபிள்கள்

30.10.14

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.வேலூர் மாவட்டம், இளையநல்லூரை கிராமத்தை சேர்ந்தவர் எம்.கோபி. இவர்,சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-காலிப்பணியிடங்கள்நான் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திலும் பதிவு செய்துள்ளேன். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 4,393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் நிரப்புவதற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று அரசு நிர்ணயம் செய்துள்ளது.வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உள்ள பதிவு மூப்பு அடிப்படையில், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவது என்பது அரசியல் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

மேலும், ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள தீர்ப்பின்படி, அரசு பணியில் காலியாக உள்ள இடங்களை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களை கொண்டு மட்டும் நிரப்பக்கூடாது. அந்த காலிப்பணியிடங்கள் குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு, அதன்மூலம் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.எனவே, காலிப்பணியிடங்கள் குறித்து விளம்பரம் வெளியிட்டு, அதன் மூலம்அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பினால், என்னை போன்றவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கு மாறாக, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு பட்டியல் பெற்று, இந்த இடங்களை நிரப்பினால், என்னை போன்ற நபர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது.


எனவே, வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு பள்ளி ஆய்வ உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்படி, பொது விளம்பரம் வெளியிட்டு, தகுந்த நபர்களை தேர்வு செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ‘காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளலாம். அதே நேரம், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அந்த பணியிடங்களை நிரப்புவது தொடர்பான இறுதி முடிவினை மேற்கொள்ளக்கூடாது. இந்த வழக்கிற்கு தமிழக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக