தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்கும் பணி தற்போது நடக்கிறது. அரசு அறிவித்துள்ள தகுதிகள் உள்ள பள்ளிகளுக்கே அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதால், தனியார் பள்ளி நிர்வாகங்கள் கலக்கத்தில் உள்ளன. வரும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் அங்கீகாரம் புதுப்பிப்பதில் மெட்ரிக் பள்ளிகள் நடத்துவோர் வேகம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறவினர்கள் சிலர் மெட்ரிக்குலேஷன் இயக்குனர் அலுவலக நடவடிக்கைகளில் தலையிட்டு, அங்கீகாரம் வழங்குவதில் சில யோசனைகளை தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஒரு சில பள்ளி நிர்வாகிகளை இடைத் தரகர்களாக வைத்து அமைச்சரின் உறவினர்கள் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதனால், பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது. இதுபற்றி, பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதாவை தனியார் பள்ளி நிர்வாகிகள் சந்தித்து முறையிட்டுள்ளனர். விசாரணையில், அமைச்சரின் உறவினர்கள் என்று கூறிக் கொண்டு சிலர் டிபிஐ வளாகத்தில் அதிகாரிகளின் அறைகளில் இருந்து கொண்டு, அவர்களுக்கே உத்தரவு போடுவதும் தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி கல்வித்துறை செயலாளர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் தக்க பதில் கூறாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து நேரடியாக விசாரித்துள்ளார்.
இதனால், ஆத்திரம் அடைந்த அமைச்சர் வீரமணி, செயலாளரின் அறைக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரம் செய லாளருக்கும் அமைச்சருக் கும் நேரடியாகவே வார் த்தை மோதல் நடந்துள் ளது. பின்னர் அமைச்சர் அங்கிருந்து கோபமாக சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மெட்ரிக்குலேஷன் இயக்குனரக அதிகாரிகளை செயலாளர் சபீதா அழைத்து, இதுபோன்ற தவறுகள் நடக்க அனுமதி அளித்தால், முதல்வரின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்ல வேண்டியது இருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும், இனிமேல், அமைச்சரின் பெயரைச் சொல்லி யாராவது உத்தரவிட்டால், எந்த உத்தரவிலும் கையெழுத்து போடக்கூடாது என்றும் எச்சரித்துள்ளார். இந்த பிரச்னைக்கு பிறகு சில கல்வி அதிகாரிகளை மாற்றுவது என்று பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள் ளது. விரைவில் இதுகுறித்து உத்தரவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் வீரமணி அலுவலகத்தை தொடர்பு கொண்டபோது, அமைச்சர் ஆலோசனையில் இருப்பதால் இப்போது பேச முடியாது என்று தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக