'குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, அரசு பணியை ராஜினாமா செய்தாலும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. திண்டுக்கல் மங்களாபுரம் சுப்பையா, 78, தாக்கல் செய்த மனு: பழநி அருகே, அரசு உதவி பெறும் பள்ளியில், 1955ல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணி புரிந்தேன். குடும்ப சூழ்நிலையால், 1972ல் ராஜினாமா செய்தேன்.
அப்போது, ஆசிரியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அமலில் இல்லை. ஓய்வூதியத் திட்டம் அமலானது, எனக்கு தாமதமாகத் தெரிய வந்தது. ஓய்வூதியம் கோரி, பள்ளிக் கல்வித் துறை செயலர், ஓய்வூதியத் துறை இயக்குனருக்கு, 2008ல் விண்ணப்பித்தேன். ஓய்வூதியத்துறை இயக்குனர், 'அரசு பணியை ராஜினாமா செய்தவர்களுக்கு, ஓய்வூதியம் வழங்க விதிகளில் இடமில்லை' என, 2013, ஏப்., 14ல் நிராகரித்தார். 'குறிப்பிட்ட காலம் வரை பணிபுரிந்து, பின் ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் வழங்கலாம்' என, 1983ல் அரசு உத்தரவிட்டது. நான், 17 ஆண்டுகள் பணி புரிந்துள்ளேன். அரசு உத்தரவுப்படி, ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது. ஓய்வூதியத்துறை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு, 1972லிருந்து ஓய்வூதிய நிலுவைத் தொகை, மாத ஓய்வூதியம் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.சசிதரன் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் சாதிக் ராஜா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டதாவது: குறிப்பிட்ட காலம் பணிபுரிந்து, பின் ராஜினாமா செய்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது. மனுவை, ஓய்வூதியத்துறை இயக்குனர் பரிசீலித்து, சட்டத்திற்குட்பட்டு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக