"பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில்கொண்டு வரப்பட்ட "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில், மாற்றம் செய்ய வேண்டும்,' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்விமுறை நடைமுறையில் உள்ளது; பத்தாம் வகுப்பில், இதற்கு மாறாக, காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை, மாணவர்கள் எழுத வேண்டியுள்ளது. எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கட்டாய தேர்ச்சி உள்ளதால், பொதுத்தேர்வு எழுதும்போது மட்டுமே, மாணவர்களின் கல்வித்திறன் முழுமையாக வெளிப்படுவதாக கூறப்படுகிறது. பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைய, இந்நடைமுறையே முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.இதற்குதீர்வாக, கடந்தாண்டு "பிரிட்ஜ் கோர்ஸ்' முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி, அறிவியல், சமூக அறிவியல் மற்றும்கணிதத்தில் முக்கிய பாடங்களை நடத்துவது; பிற பள்ளிகளில் இருந்து ஆசிரியர்களை கொண்டு, சிறப்பு வகுப்பு நடத்துவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டன.மாவட்டத்தில், 189 அரசு மற்றும் அரசு உதவி பெறும்உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், பல ஆயிரத்துக்கும் மேற்பட்டமாணவ, மாணவியர், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு, கல்வித்துறை சார்பில், "பிரிட்ஜ் கோர்ஸ்' முறை, பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது.எனினும், "கடந்த கல்வியாண்டில் மாணவர்கள் இடையே, இத்திட்டம் பெரியளவு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை; இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை,' என ஆய்வில் தெரியவந்தது. இதனால், நடப்பு கல்வியாண்டில் "பிரிட்ஜ் கோர்ஸ்' முறையில் மாற்றம் கொண்டு வர, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இத்திட்டத்தில் மாற்றத்தை ஏற் படுத்தி, விரைவில் பள்ளிகளில் செயல்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பள்ளி ஆசிரியர்கள் தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது,"பிரிட்ஜ் கோர்ஸ் முறையில் மாற்றத்தை ஏற்படுத்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என கூறப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் இத்திட்டம் குறித்து, இதுவரை எவ்வித அறிவிப்பையும் கல்வித்துறை வெளியிடவில்லை,'என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக