லேபிள்கள்

19.3.15

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்திலேயே புத்தகங்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டுக்கான (2015-16) பிளஸ் 2புத்தகங்களை ஏப்ரல் முதல் வாரத்திலேயே விநியோகிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் கோடை விடுமுறையிலும் படிக்கும் வகையில், அவர்களுக்கு முன்கூட்டியே புத்தகங்களை விநியோகிக்க அரசு முடிவு எடுத்தது.இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் இப்போது மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

அங்கிருந்து இந்தப் புத்தகங்களை அரசுப் பள்ளிகளுக்கு புதன்கிழமை (மார்ச் 18) முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்க வேண்டும் என அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்ட்டுள்ளது.அரசுப் பள்ளி மாணவர்களுக்காக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் ஒரு கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.பிளஸ் 2 வகுப்புக்கான புத்தகங்கள் 95 சதவீதமும், பத்தாம் வகுப்புக்கான புத்தகங்கள் 50 சதவீதமும் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் மாத இறுதியில் நிறைவடைகின்றன. 

தேர்வு முடிந்த இரு தினங்களுக்குள் முடிவுகள் வெளியிடப்பட்டு, மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்படும். அதேபோல், 9-ஆம் வகுப்புத் தேர்வுகள் நிறைவடைந்த பிறகு, பத்தாம் வகுப்புப் புத்தகங்கள் மாணவர்களுக்கு விநியோகிக்கப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்தனர்.1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டுக்காக மொத்தம் 4.52 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு வருகின்றன.இதில் 3.17 கோடி புத்தகங்கள் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் ஆகும். 1.35 கோடி புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கானது. 
இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்குநேரடியாக விற்பனை செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக