“தமிழகத்தில் கடந்த, 2003ம் ஆண்டுக்கு பின், இரண்டு லட்சம் பேரிடம், புதியபென்ஷன் திட்டத்திற்காக, பிடித்தம் செய்த, 5,000 கோடி ரூபாய்க்கு, என்ன கணக்கு உள்ளது என்பதே தெரிவில்லை,” என்று ஆசிரியர் சங்க பிரதிநிதி , திருச்சியில் தெரிவித்தார்.
மேலும் அவர், கூறியதாவது: தமிழகத்தில், ஜாக்டோ அமைப்பு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், நிதித்துறை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோரிடம் விண்ணப்பம் வழங்கப்பட்டது.இந்த கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காததால், கடந்த, 8ம் தேதி ஜாக்டோ சார்பில், மாநிலம் தழுவிய பேரணி நடத்தப்பட்டது. ஆறாவது ஊதியக்குழுவின் அறிவிப்பை, 8 ஆண்டுகளாகியும் அமல்படுத்தவில்லை.கடந்த, 2003ம் ஆண்டு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களிடம் இருந்து, அடிப்படை, தர ஊதியம், அகவிலைப்படியில் இருந்து, 10 சதவீதம் பிடித்தம் செய்தனர். 2004ம் ஆண்டு முதல், இன்று வரை, இரண்டு லட்சம் பேரிடம், ரூ.2,500 கோடி பிடித்தம் செய்துள்ளனர்.இதற்கான ஒப்புகை சீட்டு இன்று வரை வழங்கப்படவில்லை.
மேலும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசு செலுத்த வேண்டிய, 2,500 ரூபாய் உள்ளிட்ட, 5,000 கோடி ரூபாய்க்கு, என்ன கணக்கு உள்ளது, எனத் தெரிவில்லை. பணி ஓய்வு பெற்றவர்கள், இடைப்பட்ட காலத்தில் இறந்தவர்கள் என, யாருக்கும் பணப்பலன்கள் கிடைக்கவில்லை.தமிழகத்தில், எதிர்காலத்தில் தொடக்கப்பள்ளிகள் இல்லாமல் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி வயது குழந்தைகளை கண்டறிந்து, அரசு பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டுதோறும், பிப்ரவரி மாதம், எஸ்.எஸ்.ஏ., மூலம் எடுக்கப்படும் கணக்கெடுப்பு, வெறும் கண்துடைப்பாக உள்ளது.பள்ளி ஆசிரியர்களுக்கு, இதர துறைகளை போல பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மேலும், அரசு உதவித்தொகை பெறும் பள்ளியில், பணி நியமனம் வழங்கிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன ஒப்புகையை, அரசு வழங்க வேண்டும்.ஜாக்டோ உயர்மட்ட குழு, மார்ச் 21ல் சென்னையில் கூடி, அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக