குமரி மாவட்டத்தில் காலியிடங்கள் மறைக்கப்பட்டதை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தில், மாவட்டத்திற்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நேற்று நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. மொத்தம் 68 ஆசிரியர் காலி பணியிடங்கள் இருந்தன. ஆனால் 40 இடங்கள் மட்டுமே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 28 இடங்கள் மறைக்கப்பட்டன. இதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வித்துறை அதிகாரிகள், இதுதொடர்பாக உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ‘40 இடங்களை கொண்டு கலந்தாய்வை நடத்தினால்போதும், இல்லையெனில் கலந்தாய்வை நிறுத்திவிடுங்கள்’ என்று கூறியுள்ளனர்.
காலியிடங்களை மறைத்து கலந்தாய்வு நடத்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலந்தாய்வு நிறுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து கலந்தாய்வு அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின்னர் மேலும் 10 காலியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தனர். மீண்டும் கலந்தாய்வு மாலை 3 மணிக்கு பிறகு நடத்தப்பட்டது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறும்போது, ‘வெளி மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்களை கொண்டு 18 இடங்கள் மறைமுகமாக நிரப்பப்படும் எனவும், இதில் லட்சக்கணக்கில் பணம் புரளும் என்றும் தெரிவித்தனர்.
வேலூரில் அதிகாரியை முற்றுகை: வேலூர் டான்போஸ்கோ பள்ளியில் தொடக்கக்கல்வி இடைநிலை ஆசிரியர்களின் இடம் மாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது. அப்போது தலைமையாசிரியர் பணியிடம் நேரடியாக நிரப்பப்பட்டுள்ளது.
கல்வி அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு பணியிடங்களை நடத்தினால் எதற்காக கலந்தாய்வு நடத்துகிறீர்கள்? என்று ஆசிரியர்கள் வாக்குவாதம் செய்தனர். போலீசார் தலையிட்டதையடுத்து. தொடக்க கல்வி துணை இயக்குனர் பொன்அருண்பிரசாத் வந்து நேரடி நிர்வாக மாறுதலுக்கான ஆணையை வெளியிடுவதாக கூறினார்.
ஆனால் மாலையில் வெளியிடவில்லை. அதை கேட்டதற்கு ‘நான் எந்த ஆணையும் வெளியிட முடியாது. உங்களால் முடிந்தால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் போய் கேளுங்கள்’ என்று கூறினார். இதனால் ஆவேசம் அடைந்த ஆசிரியர்கள், அவரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில ஆசிரியர்கள், ‘நாங்கள் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம்’ என்று கூறிவிட்டு, தங்களது ஆணையை வாங்கி சென்றனர்.
ஆசிரியர்களிடையே தள்ளுமுள்ளு
ராமநாதபுரத்தில் கவுன்சலிங் நேற்று மதியம் 2 மணிக்கு துவங்கியது. அப்போது ஏற்கனவே நிரப்பப்பட்ட டி.வேப்பங்குளம் பள்ளி தலைமையாசிரியர் பணியிடத்தை காலிப் பணியிடமாக அறிவிக்க கோரி ஒரு பிரிவினரும் அதை எதிர்த்து மற்றொரு பிரிவு ஆசிரியர்களும் வாக்குவாதம் செய்ததால், ஆசிரியர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக