லேபிள்கள்

26.8.15

கவுன்சிலிங்கில் வெளி மாவட்ட பணி: ஏமாற்றத்தில் ஆசிரியர்கள் l

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பலருக்கு வெளிமாவட்டங்களில் இடம் கிடைத்ததால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். 


பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறை சார்பில் நடப்பு ஆண்டில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமிநாதன் கலந்தாய்வை நடத்தினார். பதவி உயர்வு பெற தகுதியுடைய 58 பேர் காலை 9 மணிக்கே வந்து கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பாட வாரியாக இரவு 7 மணி வரை கவுன்சிலிங் நடந்தது. இதில் 2 ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். எஞ்சிய 56 பேரில் பலருக்கு வெளி மாவட்டங்களில் தான் ஆசிரியராக பணி வாய்ப்பு கிடைத்தது. தமிழ் பாடத்திற்கு 4 பேர் விண்ணப்பம் செய்ததில் ஒருவர் மட்டுமே பணி வாய்ப்பு பெற்றார். இது போல் கணித பாடத்திற்கு 9 பேரில் 3 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு கிடைத்தது. வெளி மாவட்டத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டதால் 6 பேர் பதவி உயர்வே வேண்டாம் என மறுத்துவிட்டு சென்றனர். மேலும் இது போல் இயற்பியல் ஆசிரியர் 6 பேர், வேதியியல் ஆசிரியர் 5 பேர், ஆங்கில ஆசிரியர் 9 பேர் ஆகியோர் வெளி மாவட்ட பணியை வேண்டாம் என மறுத்து விட்டு திரும்பி சென்றனர். வரலாறு பாடத்திற்கு வந்திருந்த இருவரில் ஒருவரும், பொருளாதார பாட ஆசிரியர்கள் 5 பேரில் இருவரும் பதவி உயர்வு பெற்றனர். சொந்த ஊரில் இருந்து தொலை தூரங்களில் உள்ள ஊர்களில் பலருக்கு பணி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டதால் அவர்கள் பதவி உயர்வை தவிர்த்தனர். இவர்களுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னரே மீண்டும் பதவி உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக