நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே அரை நூற்றாண்டை கடந்த அரசுப் பள்ளி 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாணவர்கூட இல்லாத நிலையில், மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
ஆனால், பல்வேறு தரப்பினர் முயற்சியால் தற்போது 3 ஆசிரியர்கள், 16 மாணவர்களுடன் செயல்படும் இந்த பள்ளிக்கு வகுப்பறை கட்டடம் கட்டித் தரவேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் கேள்விக்குறியாகி வருகிறது. அந்த வகையில், 7.6.1962-ல் தொடங்கப்பட்ட தகட்டூர் ஊராட்சி, ராமகோவிந்தன்காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஒரு மாணவர்கூட இல்லாமல் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது.
நுற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி பயின்று வெளியேறிய இப்பள்ளியில், கடந்த 2013 ஜூன் மாதம் 4 மாணவர்கள் பயின்று வந்த நிலையில், ஜூலை மாதத்தில் ஒருவர்கூட இல்லை. அங்கு பணியாற்றிய 2 ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர் வேறு பள்ளிகளுக்கு மாற்றப்பட்டு, பள்ளி செயல்பாடு முடங்கியது.
பள்ளியை மூடுவது தொடர்பாக முறையான உத்தரவுக்காக காத்திருந்த நேரத்தில், சமூக ஆர்வலர்கள் உதவியோடு பள்ளியை மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதையடுத்து, க. சுப்பிரமணியன் என்ற ஆசிரியர் பணியமர்த்தப்பட்டு அஸ்வின்குமார் என்ற மாணவர் சேர்க்கையுடன் பள்ளி செயல்பட தொடங்கியது.
தற்போது, 7 மாணவிகள் உள்பட மொத்தம் 16 பேர் படிக்கின்றனர் (முதல் வகுப்பில்-4, 2-ல் 5, 3ஆம் வகுப்பில் 3, 4-ல் 3, 5 ஆம் வகுப்பில் ஒருவர்) இதுதவிர சேர்க்கையில்லாமல் 4 சிறுவர்களும் படிக்கின்றனர்.
தலைமையாசிரியர் மு. மஞ்சுளா, பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் துர்கா என்ற ஆசிரியர், சத்துணவு பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். அரசு அளிக்கும் சீருடை, புத்தகப் பை தவிர டை, அடையாள அட்டை அணிதல் போன்ற ஆங்கில வழிக்கல்வி கூடங்களில் இருப்பதை போன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. இவைகளுக்கு ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் உதவி வருகின்றனர்.
வகுப்பறை கட்டடம் தேவை:
இதுகுறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கோ. விஜயகுமார்,ஊராட்சித் தலைவர் எம்.எஸ். அமிர்தகடேசன் ஆகியோர் கூறியது:
பள்ளி வகுப்பறை பழைய ஓட்டுக் கட்டடமாக இருப்பதால் மழை பெய்யும்போது மாணவர்கள் சிரமத்துக்குள்ளாக நேரிடுகிறது. பள்ளிக்கு 2 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் கட்டித் தர அரசு முன்வர வேண்டும் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக