லேபிள்கள்

29.8.15

3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை பிற மாவட்டத்துக்கு இடம் மாற்ற தடை : பள்ளி கல்வித்துறை அதிரடி

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கு 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை இடம் மாற்றம் செய்ய தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் அதிகபட்சம் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. 

இதனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை அதிகமாக உள்ள மாணவர்கள் பள்ளியில் அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது. ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வின் இறுதிக்கட்டமாக நேற்று முன்தினம் இந்த பணிநிரவல் கலந்தாய்வு துவங்கியது. ஆனால் இந்த பணி நிரவல் நடவடிக்கையில் தெளிவான அணுகுமுறை இல்லை.

9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை திடீரென ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளிக்கு மாற்றினால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். பிற மாவட்டங்களுக்கு திடீரென ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்வதும் கடினம் என ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை என்ற கணக்கை மாற்றி விட்டு இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி ஆசிரியர்கள் பணியிடம் தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதனால் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக