லேபிள்கள்

23.8.15

சட்ட அந்தஸ்து இல்லாத 15,000 தனியார் பள்ளிகள்

தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டிய, 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை, தனி இயக்குனரகம் அமைத்து செயல்படுத்துவதால், சட்ட அந்தஸ்து இல்லாமல் பள்ளிகளும், இயக்குனரகமும் தடுமாறுகின்றன.

ஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் பள்ளிகள்
இயங்கின. பாடத்திட்டம், தேர்வு முறை உள்ளிட்ட அனைத்தும், பல்கலைக் கழகங்களால் நிர்ணயிக்கப்பட்டன. கல்லுாரி படிப்புக்கு இணையாக, பி.யூ.சி., படிப்பும் நடத்தப்பட்டது.

கடந்த, 1973ல், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டம், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 1976ல், சென்னை பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், மெட்ரிக் பள்ளிகள் எல்லாம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் வந்தன.

மெட்ரிகுலேஷன்:ஆனால், இந்த பள்ளிகளை, தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வராமல், தனியாக, 'மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் வாரியம்' என்ற புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர, தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த வாரியத்திற்கு, 1977ல் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இந்த பள்ளிகள், தனி வாரியத்தின் கீழ் இயங்கினாலும், பி.யூ.சி., முறைக்கு பதில், பள்ளிக்கல்வி இயக்குனரகம் கொண்டு வந்த, பிளஸ் 2 பாட திட்டத்தையே பின்பற்றுகின்றன.

இப்பள்ளிகளை, தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் தான் கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக, தனியாக வாரியம் உருவாக்கி, 'மெட்ரிக்' என்ற பெயரில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீகாரத்துக்கு சட்ட அந்தஸ்து இல்லை என, கல்வியாளர்கள் கூறினர்.
இதுதொடர்பாக, பா.ம.க.,வின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.வேலு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், 'தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் மட்டுமே
சட்டப்பூர்வமானது.

மெட்ரிக்குலேஷன், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் ஆகிய பள்ளிகளுக்கான விதிமுறைகள் சட்டப்பூர்வமற்றவை. எனவே, இப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றை ஒழுங்குமுறைப்படுத்த, மாநில அரசு முன் வரவேண்டும்' என, கூறியிருந்தார்.

தனி சட்டம் தேவை:இந்த வழக்கில், ஜூனில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்த, தனியாக சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்கான வரைவுச் சட்டத்தை உருவாக்க, ஒரு மாதத்தில் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும். வரைவுச் சட்டம் தயாரானதும், மக்களின் கருத்துக்களைக் கேட்டு சட்டமாக்க வேண்டும்' என, உத்தரவிட்டது.

ஆனால், இதுவரை, குழு அமைக்கவோ அல்லது வரைவுச் சட்டம் தயாரிக்கவோ, தமிழக பள்ளிக்கல்வித் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தப் பிரச்னையால், சட்ட அந்தஸ்து இல்லாமல், 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றை நிர்வகிக்கும் மெட்ரிக் இயக்குனரகமும், முக்கிய முடிவு எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

'ஸ்டிரைக்' நடத்த திட்டம் :தமிழகத்தில், 4,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில், மெட்ரிக் இயக்குனரகம் தொடர்ந்து காலதாமதம் செய்வதாகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், பள்ளிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

'போதிய இடம் இல்லை என்று கூறி, 1,200 பள்ளிகளுக்கும்; கட்டடங்களுக்கு உள்ளாட்சி அனுமதியில்லை' என்று கூறி, 2,800 பள்ளிகளுக்கும் அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து, தனியார் நர்சரி பிரைமரி மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகள், 4,000 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக, அமைச்சர், முதன்மைக் கல்விச் செயலர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசியும் பலனில்லை.

எனவே, ஒரு மாதத்தில் அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் உள்ள, 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினரும், அக்டோபர், 5ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக