லேபிள்கள்

29.8.15

பி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு?

பி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

மாணவர் சேர்க்கை:

பி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

பி.எட்., படிப்பு எத்தனை ஆண்டு என்ற குழப்பம் தீர்க்கப்படாமலேயே, மாணவர் சேர்க்கை பணி துவங்கியுள்ளது. மத்திய அரசு அளித்த புதிய விதிமுறைகளையும், தமிழக அரசு எந்த திருத்தமும் இன்றி, அப்படியே வெளியிட்டு உள்ளது.இதன்படி, பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., முடித்தவர்களும், பி.எட்., படிப்பில் சேரலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பொதுவாக, பி.எஸ்சி., - எம்.எஸ்சி., - பி.ஏ., -எம்.ஏ., போன்ற பட்டப்படிப்புகளில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், பொருளியல் மற்றும் மொழிப் பாடங்களில், அதாவது, பள்ளிகளில் பிளஸ் 2 வரை, அமலில் உள்ள பாடப்பிரிவுகளை படித்தால் மட்டுமே, அவர்களை, பி.எட்., படிப்பில் சேர்ப்பது வழக்கம். பி.எட்., முடித்த பின், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் ஆசிரியராக பணி வாய்ப்பு பெறுவர்.

அதுவும், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களே, ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். ஆனால், பி.இ., - பி.டெக்., முடித்தால், அவர்கள் படிக்கும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் போன்ற பாடப்பிரிவுகள், பள்ளிகளில் கிடையாது. எனவே, அவர்களை எப்படி ஆசிரியர் பணியில் சேர்க்க முடியும். அதற்கு ஏற்றார் போல் பாடத்திட்டம் மாறுமா; எப்போது மாற்றப்படும். பணி நியமன விதிகளில் மாற்றம் வருமா என, பல கேள்விகள் எழுந்துள்ளன.

புது நடைமுறை வேண்டாம்:


இதுகுறித்து, தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் கூறும்போது, ''இது குளறுபடியான அறிவிப்பு. பி.இ., - பி.டெக்., படிப்புக்கும், பள்ளிப்படிக்கும் இணை வைக்க முடியாது.''அப்படி வைப்பதாக இருந்தால், அந்த பாடப்பிரிவுகள் தனியாக பள்ளிகளில் துவங்கப்பட வேண்டும். எனவே, புதிய நடைமுறை தேவையற்ற பிரச்னைகளையும், குழப்பத்தையுமே உருவாக்கும்,'' என்றார்.

மாணவர் சேர்க்கையில் எஸ்.எம்.எஸ்., வசதி:


இந்த ஆண்டு பி.எட்., படிப்புக்கு மட்டுமே, ஒற்றைச் சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. எம்.எட்., படிப்புக்கு அந்தந்த கல்லுாரிகளே மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பரிசீலனைக்கு பின், தேர்வானவர்கள் கலந்தாய்வுக்கு வர, இந்த ஆண்டு முதல் முறையாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக