லேபிள்கள்

5.9.17

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர்

நவோதயா பள்ளிகளில் படித்த 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளதாக வழக்கு விசாரணையின்போது மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. குமரி மகா சபையின்
செயலாளர் ஜெயக்குமார் தாமஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் 1986-ம் ஆண்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. இவை 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளன.

இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அந்தப் பள்ளிகளை தொடங்க மாநில அரசு ஒத்துழைக்கவில்லை. எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி, “இந்த மனு தொடர்பாக தமிழக அரசிடம் கூடுதல் விவரங்கள் பெற அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார்.

பின்னர் புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி, “நாடு முழுவதும் நவோதயா பள்ளிகளில் படித்த 14,185 மாணவ, மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு எழுதினர். இதில் 11,875 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளனர். கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காரைக்கால் நவோதயா பள்ளியில் படித்த மாணவர்கள் சிலர், அவர்களின் பெற்றோரின் பணியிட மாறுதல் காரணமாக மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள நவோதயா பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் ஆசிரியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்” என்றார்.

இதையடுத்து “தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் எஸ்.எஸ்.எல்.சி. வரை தமிழ் கற்பிக்கப்படும் என நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குனர் எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்குவது தொடர்பாக கொள்கை முடிவுகள் எடுப்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக