லேபிள்கள்

6.9.17

'சிந்தனையை தூண்டும் ஆசிரியர்கள் தேவை'

''மாணவர்களின் சுய சிந்தனையை துாண்டும் ஆசிரியர்களையே, உலகம் எதிர்பார்க்கிறது,'' என, முதல்வர் பழனிசாமி கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான நேற்று, நாடு முழுவதும், ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.

தமிழக அரசு சார்பில், 'நல்லாசிரியர் விருது' வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.

இதில், 383 ஆசிரியர்களுக்கு, விருதுகளை வழங்கி, முதல்வர் பழனிசாமி பேசியதாவது: கல்வியின் முக்கியத்துவத்தையும், மேன்மையையும் அறிந்து, பள்ளிக்கல்வித் துறைக்கு, நடப்பு நிதியாண்டில், 27 ஆயிரம் கோடி ரூபாய் உட்பட, ஆறு ஆண்டுகளில், 1.37 லட்சம் கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

ஆறு ஆண்டுகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 40 ஆயிரத்து, 433 ஆசிரியர்கள்; 15 ஆயிரத்து, 169 பகுதி நேர ஆசிரியர்கள்; 4,.362 ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில், 3,336 முதுகலை மற்றும் 748 கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழக அரசின் பல நலத்திட்டங்களால், மாணவர் சேர்க்கை, தொடக்கக் கல்வியில், 99.85 சதவீதம்; நடுநிலையில், 99.20 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஐந்து ஆண்டுகளில், பிளஸ் 2 முடித்த, 26 லட்சத்து, 96 ஆயிரம் மாணவர்களுக்கு, 4,723 கோடி ரூபாய் செலவில், 'லேப் - டாப்'கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு, 5.40லட்சம் பேருக்கு, இலவச, 'லேப் - டாப்' வழங்கப்படும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழியில் வந்த அரசு, திறந்த புத்தகமாக செயல்பட்டு வருவதை, அரசின் திட்டங்கள் காட்டுகின்றன.
ஆசிரியர்களுக்காக, சென்னை மற்றும் திருச்சியில் இல்லங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோவைக்கும், இந்த வசதி விரிவுபடுத்தப்படும். தற்போதைய சூழலில், கற்று கொடுக்கும் ஆசிரியரை விட, கற்றலை துாண்டும் ஆசிரியரை விட, மாணவர்களின் சுய சிந்தனையை துாண்டும் ஆசிரியர்களையே, இந்த உலகம் எதிர்பார்க்கிறது. குழந்தைகள் கற்றுக் கொள்ளும் வகையில், கற்றல் முறைகளை மாற்றுங்கள். மாணவர்களை, டாக்டர் ராதாகிருஷ்ணன் போலவோ, டாக்டர் அப்துல் கலாம் போலவோ, சிறந்த குடிமகன்களாக உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக்கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ், பாடத்திட்டத்துக்கான பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக