லேபிள்கள்

5.9.17

மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின மாணவிகள் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய தடை

தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கியது.
மாணவிகள் ஜீன்ஸ், லெகிங்ஸ் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறுகட்ட பிரச்சினைகளுக்கு பின் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் முடிவடைந்தது. பி.டி.எஸ். படிப்புக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

வழக்கமாக ஆகஸ்டு 1-ந்தேதி எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பான பிரச்சினைகள் நீடித்துவந்ததால் ஒரு மாதம் தாமதமாக நேற்று வகுப்புகள் தொடங்கியது.

சென்னை மருத்துவ கல்லூரியில் சீனியர் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளை சீனியர் மாணவ, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களுக்கு மருத்துவ படிப்பு குறித்து பேராசிரியர் டாக்டர் சுதா எடுத்துரைத்தார்.

இதேபோல், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சிகள் நடந்தன. புதிய மாணவ, மாணவிகளும் உற்சாகத்துடன் கல்லூரிகளுக்கு சென்றனர்.

மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ கூறியதாவது:-
அரசு மருத்துவ கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் தொடங்கியுள்ளன. ஓணம் பண்டிகை விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்களில் கல்லூரிகள் தாமதமாக தொடங்கும். அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்க 10-ந்தேதி வரை அவகாசம் இருக்கிறது.

மாணவிகள் ஜீன்ஸ், லெகிங்ஸ், ஸ்லீவ்லெஸ் மேலாடைகள் போன்றவையும், மாணவர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் போன்றவையும் அணியக் கூடாது. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்றவை அணியலாம். மாணவர்கள் பேன்ட்-சட்டை அணிந்து இன் செய்து, ஷூ அணிந்தும் வரவேண்டும். வகுப்பறையில் மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. இதுபற்றி அனைத்து கல்லூரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கிங்கை தடுக்க தனி குழு அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக