பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வு மையத்தில் வளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் இ.விஜய் என்பவர் தேர்வுக்கு வராத எஸ்.விஜய் என்ற மாணவர் பெயரில் தமிழ் முதல் மற்றும் 2–ம் தாள், ஆங்கிலம் முதல் மற்றும் 2–ம் தாள் ஆகிய 4 தேர்வுகளை எழுதியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நேற்று முன்தினம் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையில் குடியாத்தத்தில் உள்ளதனியார் மேல்நிலைப் பள்ளியிலும் இதேபோன்று நடந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தகவல் சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மேல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் புருஷோத்தமன் (வடபுதுப்பட்டு தலைமை ஆசிரியர்), துறை அலுவலர் செங்கல்வராயன் மற்றும் தேர்வு துறை கண்காணிப்பாளர்கள் 4 பேர் மற்றும் குடியாத்தம் தனியார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர் மற்றும் தேர்வு கண்காணிப்பாளர்கள் ஆகியோர் நேற்று விசாரணைக்கு சென்னைக்கு அழைக்கப்பட்டனர்.
இந்த விசாரணையில் நடந்த சம்பவம் குறித்து எழுத்து மூலமாக கேட்டுப்பெறப்பட்டதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி கூறியதாவது:–
மேல்பட்டி தேர்வு மையத்தில் தவறு நடந்தது உண்மைதான். இது மாணவரின் தவறல்ல. தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியரின் கவனக்குறைவால் இதுபோல் ஏற்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவருக்கு உரிய மதிப்பெண் கிடைக்கும். கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக