லேபிள்கள்

6.4.14

'நம்ம பள்ளி, நம்ம குழந்தை': துவக்கப் பள்ளிகளுக்கு கையேடு தர முடிவு

அரசு துவக்கப்பள்ளியில் வரும், கல்வியாண்டில் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, அழகிய வண்ணப்படங்களுடன் கையேடு வழங்கப்பட உள்ளது.

மத்திய அரசு மூலம் கடந்த, 2001ல், ஆறு முதல், 14 வயதுடைய அனைத்து வயது குழந்தைகளும், ஜாதி, மதம் மற்றும் சமூக வேறுபாடின்றி அனைவரும் கல்வி கற்கும் நோக்கத்துடன், 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (எஸ்.எஸ்.ஏ) என்ற திட்டம், மாநிலம் முழுவதும் துவங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை:


நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம், தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால், மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளி:




தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின், அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில், தமிழக அரசு சார்பில், 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர். இங்கு, ஆறு முதல், 14 வயது வரையுள்ள, பள்ளி வயது குழந்தைகளை, பள்ளியில் சேர்ப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், கிராமக்கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, சிறப்பான பயிற்சி வழங்குவது, எஸ்.எஸ்.ஏ.,வின் முக்கிய குறிக்கோள். எஸ்.எஸ்.ஏ., சார்பில், 'நம்ம பள்ளி, நம்ம குழந்தை' என்ற தலைப்பில், அழகிய வண்ணப்படங்களுடன், கையேடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

கட்டாய கல்வி:




கிராமக்கல்வி குழு செயல்பாடுகள், குழந்தைகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், சட்டத்தில் பெற்றோர் மற்றும் ஆசிரியர் பங்கு, உள்ளூர் அதிகார மையத்தின் பங்கு, மேலாண்மை குழுவின் பங்கு மற்றும் கூட்டம், மேம்பாட்டு திட்டத்தில் இருக்க வேண்டியவை, பள்ளி கல்வித்துறைக்கு உதவும் பிற துறைகள் உள்ளிட்ட விவரங்கள், இந்த கையேட்டில் அடங்கி உள்ளன. இந்த கையேடு, தமிழகத்தில் உள்ள, இரண்டு லட்சத்து, 65, 284 கிராமக் கல்விக்குழு மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் இந்த கையேடு வழங்கப்படும்.

எஸ்.எஸ்.ஏ., ஒருங்கிணைப்பாளர் கூறியதாவது: தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு துவக்கப்பள்ளியில், வரும், 2014- - 15ம் கல்வியாண்டில், பள்ளி மேலாண்மை குழு மூலம், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, எஸ்.எஸ்.ஏ., திட்டமிட்டுள்ளது.

கையேடு:


இதற்காக, தொடக்க கல்வி இயக்கம், சென்னை யுனிசெப் மற்றும் மதுரை மனித உரிமை கல்வி நிறுவனமும் இணைந்து, இக்கையேட்டை தயாரித்து உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக