லேபிள்கள்

10.4.14

தேர்தல் பணி: ஆசிரியைகள் அச்சம்

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி, மே 12ம் தேதி வரை 9 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். அவர்களில் 10 கோடி பேர் புதிய வாக்காளர்கள். இந்த முறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்து வருவதாலும்,
வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தேர்தல் கமிஷனின் நோக்கம் நல்ல நோக்கம்தான்.

ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை வாக்குப்பதிவு நேரத்தை அதிகரித்தால் முறைகேடுகளும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது. தமிழகத்தில் தேர்தலின் போது பெரும்பாலான வாக்குச்சாவடிகள் மாலை 3 மணிக்கு மேல் வாக்காளர் கூட்டமே இல்லாமல் மந்தமாக காணப்படும். அதே சமயம், வாக்குப்பதிவு முடிந்ததும் சதவீதத்தை பார்த்தால், மாலை 3 மணிக்கு மேல்தான் கிடுகிடுவென உயர்ந்திருக்கும். எனவே, நேரத்தை அதிகரிப்பது என்பது மேலும் முறைகேடுகள் அதிகரிக்கவே வாய்ப்பாக அமையும்.
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் 3 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் ஆசிரியைகள்தான். அவர்களால் இரவு வெகுநேரம் வரை பணியில் இருக்க முடியாது. ஆனால், தொலைதூர வாக்குச்சாவடிகளில் வாகனங்கள் வந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகளை சேகரித்து செல்ல இரவு 9 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. அதிலும் இந்த தேர்தலில் வாக்குப்பதிவு முடியும் நேரமே மாலை 6 மணி என்பதால், ஆசிரியைகள் இன்னும் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். அவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி.
அவர்கள் வீட்டில் இருந்து 2 மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய வாக்குச்சாவடிகளில்தான் பணி ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார். 
ஆனாலும், சென்னை போன்ற முக்கிய நகரங்களிலேயே இரவு நேரத்தில் வழிதெரியாத இடத்தில் இருந்து பெண்கள் வீடு திரும்புவது பாதுகாப்பற்றதாக உள்ளது. தேர்தல் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் வாகன ஏற்பாடும் செய்யப்படுவதில்லை. அதனால், தேர்தல் பணிக்கு ஒப்புக் கொள்ளவே பெண் ஊழியர்கள் அச்சப்படுகின்றனர்.
எனவே, பெண் ஊழியர்களுக்கு அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் பணி ஒதுக்கீடு செய்வதையும், மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தால் இரவு 7 மணிக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள், வாகனங்களில் ஏற்றப்பட வேண்டும் என்பதையும் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக