அரசு துவக்க பள்ளிகளில், அடிப்படை பணியாளர்கள் இல்லாததால், சுகாதாரப்பணிகளில் பிஞ்சு மாணவர்களை ஈடுபடுத்தும் அவலம் தொடர்கிறது.
துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ தேர்வு ஒரு வாரத்தில் துவங்கவுள்ளது. தற்போது, தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில், சில அரசு பள்ளிகளில், சுகாதார பணிகளில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மாநில அளவில் 90 சதவீத துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், அடிப்படை மற்றும் துப்புரவு பணியாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவைப்புதூரிலுள்ள, குளத்துப்பாளையம் துவக்கப் பள்ளியில் 220 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம், இப்பள்ளியை சுத்தம் செய்யும் பணியில் மாணவர்கள், ஆசிரியர்கள் முன் ஈடுபடுத்தப்பட்டனர். மாணவர்கள் சிலர் மேலாடையின்றி, தண்ணீர் சுமந்து வந்து பள்ளியை கூட்டி சுத்தம் செய்தனர்.
கோவைபுதூரைச் சேர்ந்த, சமூக ஆர்வலர் லட்சுமி கூறுகையில், ''பள்ளிக்கு, பிள்ளைகளை படிக்க அனுப்பினால், விளக்குமாறை கையில் கொடுத்து, தரையை, கழிவறையை கூட்டச் சொல்வது என்ன நியாயம்? போதிய பணியாளர் இல்லை என்பதால், இப்படி செய்யச் சொல்வதாக கூறும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், தங்களது பிள்ளைகளுக்கு இப்படியொரு கொடுமை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா. இந்த பிரச்னையை மனித உரிமை கமிஷனுக்கு எடுத்துச் செல்வோம். ஒட்டுமொத்த கல்வித்துறை அதிகாரிகளும் இதற்கு பதில் சொல்லியாக வேண்டும்,'' என்றார்.
புகார் குறித்து, கோவை மாவட்டதொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு ) காந்திமதி கூறுகையில், ''பள்ளி மாணவர்களை பராமரிப்பு பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என்று எற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள புகார் குறித்து, சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய உதவி தொடக்க கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, '' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக