முப்பருவ கல்வி முறையில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும் ஒரே புத்தகத்தை படித்து காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு என தேர்வு எழுதும் வழக்கத்தில் இருந்து, சில ஆண்டுகளுக்கு முன் மாறுதல் செய்யப்பட்டது.
புதிய முறைப்படி நான்கு மாதங்களுக்கு ஒரு பருவம் என்ற அடிப்படையில் முதல் பருவம், இரண்டாம் பருவம், மூன்றாம் பருவம் என புத்தகங்களை மூன்றாக பிரித்து, பாடம் நடத்தி தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பருவத்தேர்வும் முடிந்த பிறகு, அவர்கள் படித்த பாடப்புத்தகம், அதன்பின் தேவைப்படுவது இல்லை. அந்த பாடங்களை மாணவ, மாணவியர் மறந்து விடுகின்றனர். அடுத்த பருவத்துக்கான பாடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.
முப்பருவ கல்வி முறையில் படித்து வரும் மாணவ, மாணவியர் அடுத்த கல்வியாண்டில், பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை. காலாண்டு, அரையாண்டு, பொதுத்தேர்வு எழுத வேண்டும். ஆண்டு முழுவதும் படித்த மொத்த பாடங்களையும், பொதுத்தேர்வில் எழுத வேண்டும்.
முப்பருவ கல்வி முறையில் குறைந்த பாடங்களை மட்டுமே படித்து, தேர்வு எழுதி பழகிய மாணவர்கள், ஆண்டு முழுவதும் படித்த பாடங்களை பொதுத்தேர்வின் போது ஒட்டுமொத்தமாக படிப்பதும், அதற்கான வினாக்களுக்கு பொதுத்தேர்வில் பதில் அளிப்பதும் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால், பல மாணவர்களின் மதிப்பெண் கணிசமாக குறையக்கூடிய அபாயம் உள்ளது என ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் முப்பருவ தேர்வு முறை இருந்தாலும், மூன்றாம் பருவ தேர்வின்போது மூன்று பருவ பாடங்களையும் மொத்தமாக வைத்தே தேர்வுகள் நடத்தப்படுகிறது. அரசு பள்ளிகளில் அம்முறை பின்பற்றுவதில்லை. ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றாலும், அக்கறை காட்டாமல் உள்ளனர்" என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக