அரசு பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களை, சுயநிதிப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்கு தமிழக அரசு நிதி உதவி அளிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுப் பள்ளிகள் சிறப்பான வளர்ச்சியை பெற முடியும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலா 3 மாணவ } மாணவியர் மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது சீர்மரபினைச் சேர்ந்த தலா 2 மாணவ } மாணவிகள் என மொத்தம் 10 பேருக்கு, தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்து படிக்க தமிழக அரசு நிதி உதவி வழங்குகிறது.
மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, கல்வி கட்டணம், பராமரிப்பு கட்டணம், விடுதிக் கட்டணம், சிறப்பு பயிற்சி கட்டணம் என ஆண்டொன்றுக்கு ரூ.28 ஆயிரம் வீதம், 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவு, மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அவர்களை சிறப்பாக உருவாக்கிய ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.
பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைத் தவிர்த்து, சிறப்பு வகுப்புகள், மாலை நேர வகுப்புகள் என பல்வேறு வழிகளில் பொதுத் தேர்வுக்காக மாணவர்களை தயார் செய்வதால் சில அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுயநிதிப் பள்ளிகள், மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு பாடங்களை முழுமையாக நடத்துவதில்லை. அதற்கு பதிலாக பத்தாம் வகுப்பு பாடங்களை, ஒன்பதாம் வகுப்பின் 2ஆம் பருவ தேர்வுக்கு பின் நடத்துகின்றன.
மேலும் சுயநிதிப் பள்ளிகளில், கல்வி தரத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கின்றனர். 100 சதவீத தேர்ச்சி என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தரத்தில் பின் தங்கிய மாணவர்களை வெளியேற்றிவிடுகின்றனர்.
இறுதிக் கட்டத்தில் அவர்களுக்கு புகலிடம் அளிக்கும் இடமாக அமைவது அரசு பள்ளிகள் மட்டுமே. அப்படி வந்து சேரும் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு, பொதுத்தேர்வு எழுதும் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருக்காது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
இந்த நிலையில் அண்மையில் வெளியான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், 500 முதல் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் தேர்வில் பங்கேற்று 98 முதல் 100 சதவீத தேர்ச்சியை பல அரசு பள்ளிகள் பெற்றுள்ளன என்பது முடிவுகளை உற்று நோக்கியவர்களுக்கு புரியும்.
20 முதல் 200 மாணவர்களுடன் பங்கேற்கும் சுயநிதிப் பள்ளிகளுக்கு மத்தியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்களை சிறப்பாக வழி நடத்தி சாதித்துக் காட்டிய அரசு பள்ளிகளின் தரம் மெச்சத் தகுந்ததே.
மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று, தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களை, பல்வேறு சலுகைகளுடன் தங்கள் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ப்பதற்கு தனியார் பள்ளிகள் போட்டிபோடுவது வழக்கம். தற்போது மாவட்ட வாரியாக 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, பிரபல சுயநிதிப் பள்ளிகளில் சேர்ப்பதற்கு அரசே உதவித் தொகை வழங்கி வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கையால், அரசுப் பள்ளிகளின் மதிப்பை உயர்த்தும் நோக்கத்தில் நியாயமாகவும், சேவை மனப்பான்மையுடனும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்துள்ள மாணவர்களை, தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளும் வெளியேற்றி விடுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த தரமான மாணவர்கள், சுயநிதி பள்ளிகளுக்குச் சென்றுவிட்டால் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைவதைத் தடுக்க முடியாது. அதன் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தையும் உயர்த்த முடியாத நிலை ஏற்படும்.
கடந்த காலத்தைவிடத் தற்போது அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தரம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அனைத்து அடிப்படை வசதிகளும் அரசுப் பள்ளியில் கிடைக்க வேண்டும்.
அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அரசு பள்ளிகளிலேயே படிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சுயநிதி பள்ளியில் சேர்ந்து படிக்க வழங்கப்படும் உதவித் தொகையை, அவர்களுடைய தகுதிக்கான பரிசாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயநிதி பள்ளிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதிய சூழ்நிலையும், அங்கு கற்பிக்கப்படும் வழிமுறைகளும் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மன வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, இந்த நடைமுறையை மாற்றி, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த கல்வித் துறை முன்வர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக