லேபிள்கள்

21.6.14

பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 'சஸ்பெண்ட்'

பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் கையாடல் செய்தது தொடர்பாக, சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஈஸ்வரன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு பள்ளியிலும், மாணவர்களின் கல்விக் கட்டணம் சேகரிக்கப்பட்டு, மாவட்ட பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியில் இருப்பு வைக்கப்படும். பள்ளிகளில் நடக்கும் தேர்வு, மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேடு, விழா உள்ளிட்டவைகளுக்கு, இந்த நிதியை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பயன்படுத்திக் கொள்ளலாம். சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட அளவிலான கலை இலக்கிய விழா நடத்தியதற்கான கட்டணத்தை திருப்பி தராமல், இழுத்தடித்து வருகிறார் என, பள்ளியின் சார்பில், பள்ளிக்கல்வி துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. இதுகுறித்து விசாரிக்க, பள்ளிக்கல்வி துறை இணை இயக்குனர் உஷாராணி தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இக்குழு நடத்திய ஆய்வில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து, ஈஸ்வரன், 'செல்ப்' செக் போட்டு, நிதியை எடுத்துக் கொண்டது தெரியவந்தது. மேலும், மாணவர்களுக்கு கையேடு வழங்கியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து, பல லட்சம் ரூபாய் கையாடல் செய்தது தெரியவந்தது.


இதையடுத்து, ஈஸ்வரன் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு, இணை இயக்குனர் உஷாராணி பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில், நேற்று, பள்ளிக்கல்வி துறை செயலர் சபிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். நேற்று காலை, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாறுதல் கவுன்சலிங்கில் ஈடுபட்டிருந்த ஈஸ்வரனிடம், சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்ற, கூடுதல் சி.இ.ஓ., உஷா, கவுன்சலிங்கை தொடர்ந்து நடத்தினார். ஈஸ்வரன், தன் சொந்த மாவட்டமான சேலத்தில், ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணியாற்றி, பின், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் என, உயர் பதவிகளையும் வகித்தார். வரும் ஜூன், 30ம் தேதி ஓய்வுபெற இருந்த நிலையில், ஈஸ்வரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக