லேபிள்கள்

30.6.14

2,846 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வை 4¼ லட்சம் பேர் எழுதினார்கள் 2 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை

2,846 காலி பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வை தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் எழுதினார்கள். 2 லட்சத்து 8 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுத வரவில்லை.

குரூப்–2ஏ தேர்வு
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில், நேர்முகத் தேர்வு அல்லாமல் நேரடியாக நியமனம் செய்யப்படும், தமிழ்நாடு சட்டப்பேரவை எழுத்தர் பணி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய உதவியாளர், சமூக நலத்துறை உதவியாளர், காவல்துறை உதவியாளர், வருவாய்த்துறை உதவியாளர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு குரூப்–2ஏ தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடத்தப்பட்டது.
மொத்தம் 2846 உதவியாளர் காலி பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்த தேர்வை எழுத தமிழகம் முழுவதும் 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்திருந்தனர். சென்னையில் மட்டும் 71 ஆயிரத்து 498 பேர் தேர்வு எழுத இருந்தனர். இதற்காக, 114 மையங்களில் 2217 தேர்வு கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில், சென்னையில் மட்டும் 231 தேர்வு கூடங்கள் அடங்கும்.
மின்சாதன பொருட்களுக்கு தடை
காலை 10 மணிக்கு தொடங்கிய குரூப்–2ஏ தேர்வு மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்கான கல்வி தகுதி இளங்கலை பட்டப்படிப்பு என்று வைக்கப்பட்டிருந்தாலும், ஏராளமான முதுநிலை பட்டதாரிகளும், என்ஜினீயரிங் மாணவ–மாணவிகளும் ஆர்வத்துடன் வந்து தேர்வை எழுதினார்கள்.
இளம்பெண்கள் பலர் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத சென்ற சமயத்தில், குழந்தைகளை கணவன்மார்களும், உறவினர்களும் பார்த்துக்கொண்டனர். தேர்வு எழுத வந்தவர்கள், சோதனை செய்யப்பட்ட பிறகே தேர்வு அறைக்குள் அனுப்பப்பட்டனர். கால்குலேட்டர், செல்போன் போன்ற மின்சாதன பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
சோதனை
மேலும், முறைகேடு நடைபெறாமல் தடுக்க, மாவட்ட துணை கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த குழுவில் தேர்வு நடைபெற்ற சமயத்தில் பல்வேறு மையங்களுக்கு அதிரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு கூடத்தில், டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பொது அறிவு கேள்வி கடினம்
இதேபோல், பாரிமுனையில் உள்ள புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் உள்ள தேர்வு கூடத்தில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா ஆகியோர் கண்காணித்தனர்.
சரியாக மதியம் ஒரு மணிக்கு தேர்வு முடிந்தது. தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்தவர்களில் சிலர் கூறும்போது, ‘‘தமிழ் பாடம் எளிதாக இருந்தது. ஆனால், பொது அறிவு தொடர்பான கேள்விகள் கடினமாக இருந்தது’’ என்று கூறினர்.
67 சதவீதம் பேர் மட்டுமே எழுதினர்
குரூப்–2ஏ தேர்வுக்கு மொத்தம் 6 லட்சத்து 32 ஆயிரத்து 672 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தேர்வு எழுத 67 சதவீதம் பேர் மட்டுமே வந்திருந்தனர். அதாவது, 4 லட்சத்து 23 ஆயிரத்து 890 பேர் மட்டுமே தேர்வை எழுதினார்கள். 33 சதவீதம் பேர் தேர்வை எழுதவில்லை. அதாவது, 2 லட்சத்து 8 ஆயிரத்து 782 பேர் தேர்வு எழுதவரவில்லை.
மிகக்குறைவாக சென்னையில் 58 சதவீதம் பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். அதாவது, தேர்வு எழுத விண்ணப்பித்த 71,498 பேரில் வெறும் 41,468 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்துள்ளனர். 30 ஆயிரத்து 30 பேர் சென்னையில் தேர்வு எழுதவில்லை.
தேர்வு முடிவு எப்போது?
சென்னையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2ஏ தேர்வு நடைபெற்ற தேர்வு மையத்தை ஆய்வு செய்த பிறகு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:–
குரூப்–2ஏ தேர்வு நேர்மையாகவும், அமைதியாகவும், எந்த வித குறைபாடு இல்லாமலும் நடந்து முடிந்துள்ளது. தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் (ஓ.எம்.ஆர். ஷீட்) அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்ட பிறகு, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். நேர்மையாகவும், வெளிப்படையாகவும், எந்த வித தவறும் நடக்காமல் விடைத்தாள்கள் திருத்தப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் அனைத்தும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். இதனால், தேர்வு எழுதியவர்கள் யாரும் முறைகேடு நடந்து விடுமோ? என்று அச்சப்பட தேவையில்லை. இன்னும் 2 வாரத்தில் கேள்விக்கான விடைகள் வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தப்பட்டு விரைவில் தேர்வு முடிவு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக