நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலராக பணியாற்றி வரும் பிரபு ராதாகிருஷ்ணன் (58). இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் இருந்து பதவி உயர்வின் மூலம் மாவட்ட கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டார்.
மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் என்பது நேரடி நியமனம் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வின் மூலம் நிரப்பப்படுவதாகும். மாவட்ட கல்வி அலுவலரை பள்ளி கல்வித்துறை செயலாளர் நியமனம் செய்கிறார். தற்போது மாவட்ட கல்வி அலுவலர் நியமனம் எதுவும் இல்லை.
எனவே, அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் சீனியர் தலைமை ஆசிரியருக்கு அந்த பதவி கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ளஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 20 சீனியர் தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடம் வேண்டாம் என முதன்மைக் கல்வி அலுவலரிடம் எழுதி கொடுத்துவிட்டனர்.
இதனால், 3 சீனியர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக்தில் இருந்து பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் 3 தலைமை ஆசிரியர்களின் பெயர் சென்னை சென்றுள்ளது.
இவர்கள் 3 பேரில் ஒருவருக்கு இன்று பள்ளி கல்வித்துறை இயக்குனர் அலுவலகம் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பை கூடுதலாக அளிக்க உள்ளது. அந்த தலைமை ஆசிரியர் யார்? என்பதை அறிய மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் நிலவுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர் பிரபு ராதாகிருஷ்ணன் இன்று மாலை 5 மணிக்கு பணியில் இருந்து ஓய்வுபெறும் போது, அவரிடம் புதிய டி.இ.ஓ பொறுப்புகளை பெறவேண்டும் என்பதால் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் சஸ்பென்ஸ்க்கு இன்று மாலை விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக