லேபிள்கள்

1.7.14

வேளாண் பல்கலையில் கலந்தாய்வு துவக்கம்

வேளாண் கல்லூரிகளில், 1830 இடங்களை நிரப்பும் வகையில், மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட வேளாண் கல்லூரிகளில், வேளாண், தோட்டக்கலைத்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சி, ஹோம் சயின்ஸ், வேளாண் தொழில் நுட்பம், வேளாண் மேலாண்மை, பயோ இன்பர்மேடிக்ஸ், வேளாண் பொறியியல், உணவு பதப்படுத்துதல் உட்பட 13 பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இதில், அனைத்து பிரிவு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலையில் நேற்று துவங்கியது. உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் மொத்தமாக 1830 இடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. கடந்த ஆண்டு, 21 ஆயிரத்து 250 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், நடப்பாண்டு 27 ஆயிரத்து 735 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், முறையாக பூர்த்தி செய்யப்படாதது உட்பட சில காரணங்களால், 530 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 25 ஆயிரத்து 534 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பிளஸ் 1, பிளஸ் 2வில், முக்கிய பாடமாக வேளாண் துறையை எடுத்து படித்தவர்களுக்கான, தொழில் சார்ந்த கல்வி என்ற பிரிவில், 31 இடங்களை நிரப்பும் வகையில், 1,637 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், 199.5 கட்-ஆப் பெற்ற மாணவி லோகநாயகி பி.டெக்., புட் பிராசசிங் படிப்பையும், 199 கட்-ஆப் பெற்ற பவித்ரா, மோனிகா, 198.75 கட்-ஆப் பெற்ற பாரதி, விஜய் ஆகியோர், பி.எஸ்.சி., வேளாண் படிப்புகளையும் தேர்வு செய்தனர். நேற்று 300 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது; 109 பேர் பங்கேற்றனர். இதில், 107 பேர் பாடங்களை தேர்வு செய்தனர். இருவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். கோவை வேளாண் கல்லூரியில் படிக்க 84 பேரும், மதுரை கல்லூரியில் பயில 11 பேரும், திருச்சி கல்லூரியில் பயில 7 பேரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இன்று முதல் வரும் 11ம் தேதி வரை நடக்கும் முதற்கட்ட கலந்தாய்வில், காலையும், மாலையும் தலா 200 பேர் வீதம் என 400 பேருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 12ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை நடக்கிறது.

வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் ரபீந்திரன் கூறியதாவது: விவசாய படிப்பு குறித்த விழிப்புணர்வு, மாணவர்களிடையே ஏற்பட்டுள்ளதால், வேளாண் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். உறுப்பு கல்லூரிகளில் 1040 இடங்களை நிரப்பும் வகையிலும், இணைப்பு கல்லூரிகளில் உள்ள 840 இடங்களை நிரப்பும் வகையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 75 சதவீதம் அளவுக்கு பெண்களின் பங்களிப்பு உள்ளது. இவ்வாறு, ரபீந்திரன் கூறினார். 199.5 கட்-ஆப் மதிப்பெண் பெற்ற, திருப்பூரை சேர்ந்த மாணவி லோகநாயகி கூறுகையில், ''பிளஸ் 2 தேர்வில், 1166 மதிப்பெண் பெற்றேன். வேளாண் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தால், பி.டெக்., உணவு பதப்படுத்துதல் துறையை தேர்ந்தெடுத்தேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக