ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார்.
மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக